* சுதந்திர இந்தியாவில் பிறந்தவர் * சோகங்களை கடந்து சாதித்தவர்
ஆர். முத்துக்குமார்
நமது முதல் குடிமகளாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் 64 வயது திரௌபதி முர்மு இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கோலாகல விழாவில் 15–வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.
பாரம்பரியமிக்க இப்பதவியில் அமரும் முதல் ஆதிவாசி இனத்தவர் என்ற சிறப்புடனும் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையுடனும் இப்பதவியை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இப்பதவிக்கு கௌரவம் சேர்ப்பார்.
இன்று அதிகாரப்பூர்வமாக முதல் குடிமகளாக தேர்வு செய்யப்பட்ட அறிவிப்புடனும் ஜனாதிபதியாக இருந்த கோவிந்த் முன்னிலையில் எல்லா கட்சி தலைவர்களும் சூழ்ந்து இருக்க பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
அவருக்கு மக்கள்குரல், டிரினிட்டி மிரர் பத்திரிக்கை குழுமம் வாழ்த்துக்களை தெரிவித்து நமது முப்படை உச்ச தளபதியாக சிறப்புற செயல்பட வாழ்த்துகிறது.
15 ஜனாதிபதிகளில் இரண்டு பெண்கள்: அவர்கள் இருவருமே 2000 ஆண்டுக்கு பிறகே பதவி ஏற்றுள்ளனர். இது நாம் பெண்களுக்கு கௌரவம் தரத் துவங்கி விட்ட நல்ல செய்தியை பறை சாற்றுகிறது.
எல்லா துறைகளிலும் பெண்கள் தலைமை பொறுப்பை அலங்கரிக்கும் தகுதி படைத்தவர்கள் என்பதை பலமுறை நிரூபித்து வருகிறார்கள். விளையாட்டு துறை முதல் பல கோடி முதலீட்டு தொழில் நிறுவனங்களை தலைமை ஏற்று சிறப்பாகவே வழி நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு துறை முதல் சினிமா துறை வரை ஆண்களுக்கு இணையாக பெண்கள் சாதித்தாலும் இரு பாலருக்கும் தரப்படும் சம்பளம் முதல் கவுரவம் வரை ஆண்களுக்கு இணையாக இல்லை என்பதை நாம் அறிவோம்.
பெண்கள் நாட்டின் கண்கள் என்று போற்றும் நாம் எந்த துறையிலும் பெண்களுக்கு ஆண்களை விட அல்லது இணையாக சம்பாத்தியம் தருவதில் பின்தங்கி இருக்கிறோம்.
இந்த ஆணாதிக்கம் தணிந்து பெண்கள் உயர்ந்து அதிக வருவாய் ஈட்டும் நன்நாளில் நமது பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியைக் காணத் துவங்கி விடும்.
குடும்பத்தில் ஆண் மட்டும் சம்பாதிப்பதற்கு இணையாக வீட்டு மகளிரும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால் அக்குடும்பத்தின் பொருளாதாரம் செம்மையாகும். அதே போன்று மகளீர் பொருளாதாரம் நாட்டிற்கு சக்தியை தரும் வல்லமை பெற்று இருப்பதை சமீபமாக உணர்ந்து வருகிறோம்.
2007, இதே நாளில் 12–வது ஜனாதிபதியாக நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் பதவி ஏற்றது நினைவிருக்கலாம். அவர் 1934–ல் பிறந்தவர்.
அதாவது இந்தியாவின் சுதந்திரம் பெறும் நாள் வரும் முன்பே பிறந்தவர்.
தற்போது விடைபெறும் முன்னாள் ஜனாதிபதி 1945–ல் பிறந்தவர். அதாவது இரண்டு வயது வரை இங்கிலாந்து முடியரசு ஆட்சியில் பிறந்து வளர்ந்தவர்.
ஆனால் தற்போதைய புது ஜனாதிபதி முர்மு சுதந்திர இந்தியாவில் 1959–ல் பிறந்தவர்.
2000, பிறகு 2004–ல் ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை தேர்ந்து எடுக்கப்பட்டவர் முர்மு. நவீன் பட்நாயக் அமைச்சரவையில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியில் அமைச்சராக செயல்பட்டவர் ஆவார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுனராக 2015 முதல் பதவி வகித்த அவரைத்தான் பிரதமர் மோடியும் பாரதீய ஜனதா தலைமையும் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்து இன்று பதவி ஏற்கவும் வைத்துள்ளனர்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பழைய சமுதாயத்தில் பிறந்து வளரந்து படித்து பட்டம் பெற்று ஆசிரியையாகி வீட்டைத் தாண்டி வெளியே வருவதில் திரௌபதி முர்முவுக்கு இருந்த பல்வேறு தடைகளைத் தகர்த்தெரிந்து அவர் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார். தடைகள் அகன்று விட்டது. அதை நமக்கு உணர்த்தும் நல்ல உதாரணம் புதிய ஜனாதிபதி திரௌபதி முர்மு.
அவர் ஜனாதிபதி பதவிக் காலத்தில், கிடப்பில் தூங்கி கொண்டிருக்கும் பெண்களுக்கான பாராளுமன்ற ஒதுக்கீட்டு மசோதா உயிர் பெற்று நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்ப்போம்.
எல்லா துறைகளிலும் பெண்களுக்கான உரிய ஒதுக்கீடுகள் சென்றடைவதில் இருக்கும் கட்டுபாட்டு சங்கிலிகள் அறுத்து விடப்படும் என்று எதிர்பார்ப்போம்.
முர்மு வாழ்க்கையில் தான் எத்தனை சோகங்கள்; இன்று நமது நாட்டில் உள்ள பல குடும்பங்களில் இருக்கும் சோகங்களை உணர்ந்த அவர் பதவி வகிக்கும் கால கட்டத்தில் அனைத்து இந்தியர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நல்ல வழிகாட்டியாக இருப்பார்; இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.
நாடே அவரது பதவி ஏற்பை பார்த்து மகிழ்ந்தது; அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து பாராட்டியது; அதேபோல மக்கள் குரல், டிரினிட்டி மிரர் பத்திரிக்கையின் வாசகர்களும் ஆசிரியர் குழுவும் எல்லாப் பிரிவு ஊழியர்களும்
புதிய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு நல்வாழ்த்தை கூறி வாழ்த்துகிறார்கள்.