சிறுகதை

புது உத்தி – ராஜா செல்லமுத்து

கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள பிளாட்பார்மில் ஒரு நாட்டு மருந்து கடை இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு மூலிகைப் பொருட்கள், நாட்டு மருந்துப் பொருட்கள் என்று அதிக விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.

அந்தக் கடை பார்ப்பதற்கே இயற்கைச் சூழலில் அழகாக இருந்தது. பிளாட்பார்மில் நடப்பவர்கள் கூட அந்தக் கடைக்குள் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வரலாம் என்ற ஆவலைத் தூண்டும் அளவிற்கு அங்கே இருக்கும் பொருட்களை அழகாக அடுக்கி வைத்திருந்தார்கள். எல்லாம் இயற்கை சார்ந்த பொருட்கள். உடலுக்கும் மனதுக்கும் நெருக்கமானவைகள்.

முளைகட்டிய பயிறு, வித்தியாசமான அரிசி வகைகள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், நாட்டு கருப்பட்டியில் செய்த பலகாரம், தின்பண்டங்கள் என்று அந்தக் கடை முழுவதும் கிராமத்து வாசனை மிதந்து கிடந்தது.

அங்கே ஒரு பணிப்பெண் அழகாக உடையணிந்து எல்லோரிடமும் அன்பாகப் பேசி அத்தனை பேரையும் வரவேற்று கடையில் இருக்கும் உணவுப் பொருட்களை அழகு தமிழில் அறிமுகப்படுத்திக் கொண்டு இருந்தாள். வாங்காதவர்களைக் கூட வாங்க வைத்து விடும் நேர்த்தி அவளின் பேச்சில் இருந்தது.

அந்தப் பெண் ‘மேடம் இந்தப் பயிர வாங்கிட்டு போயி குழம்பு வச்சு சாப்பிட்டீங்கன்னா உடம்புக்கு அவ்வளவு நல்லது. இந்த அரிசி சாப்பிட்டா சர்க்கரை நோய் அண்டவே அண்டாது. இது நாட்டுக் கருப்பட்டியில் செய்த பலகாரம் உங்களுக்கு சுகர் வராது என்று அத்தனை பொருட்களையும் பேசி விற்பனை செய்து கொண்டிருந்தார். வாங்க மறுப்பவர்கள் கூட அவளின் பேச்சையாவது கொஞ்ச நேரம் கேட்கலாம் என்று நின்று கொண்டிருப்பார்கள்.

பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்ட பொருட்களைத் தவிர மற்ற பொருட்கள் அட்டைப் பெட்டியில் அடைத்து ஒரு ஓரத்தில் வைத்திருந்தாள் அந்தப் பணிப்பெண்.

பொருட்களின் அறிமுகத்தை அவனாக கேட்ட ஒரு வாடிக்கையாளர் அட்டை பெட்டி மேல் கண் வைத்தார்.

‘இதெல்லாம் எங்க இருந்து வருது?’ என்று கேட்கும்போது , ‘சார் இந்தக் கடையோட ஓனர் கோயம்புத்தூரில் இருக்காரு. எல்லாம் பார்சல் வரும். அப்பப்ப பார்சல் வந்து அத வாங்கிட்டு இங்கு வந்து கொடுப்பாங்க. எடுத்து வச்சு விற்பனை செஞ்சுடுவோம். கடையோட ஓனர் மாசத்துக்கு ஒரு டைம் வருவார். அதுவரைக்கும் நான் தான் சார் இந்தக் கடையைப் பொறுப்பா பார்த்துக்கிறேன்’ என்றாள் அந்தப் பெண்.

‘அப்படியா?’ என்று கேட்டுக் கொண்ட அந்த வாடிக்கையாளர் 25 ரூபாய்க்கு நாட்டு கருப்பட்டி மிட்டாய் ஒரு பாக்கெட்டை வாங்கி சென்றார். அங்கேயே அந்த நட்டுக் கருப்பட்டி மிட்டாயை உடைத்து எச்சில் ஊற சாப்பிட்டு ‘ஆஹா என்ன ருசி’ என்று உதட்டில் எச்சில் ஊறுவது பாேலச் சொன்னார்.

‘சார் நான் சொன்னேன்ல அவ்வளவு நல்லா இருக்கும். சார் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அவ்வளவு சத்து’ என்று அந்தப் பணிப்பெண் சொல்லி முடித்தார்.

‘சரி நான் வரேன்ம்மா என்று சொன்னார்’ அந்த வாடிக்கையாளர்.

‘நன்றி சார் திரும்ப வாங்க’ என்று அந்தப் பணிப்பெண் பதிலுக்கு அந்த வாடிக்கையாளரிடம் சொல்லி அனுப்பினாள்.

இன்னும் சில வாடிக்கையாளர்கள் அந்தக் கடையில் நுழைந்து பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்தார்கள்.

அப்போது கடைக்குள் வேகமாக ஒரு நபர் நுழைந்தார். செல்போனில் அவருக்கு அவரே பேசிக் கொண்டார்.

‘சார் நான் கடையில தான் இருக்கேன். நான் சொன்ன சரக்கு வந்துடுச்சு சார். கோயம்பேட்டில் போயி எடுக்கணும். ஆமா சார் இப்போ கடையில அந்தப் பொண்ணு இருக்காங்க. பணம் வாங்கிக் கொள்ளலாமா சார்?’ என்று கேட்டார்.

‘ஓகே நான் வாங்கிக்கிறேன் சார்’ என்று அவருக்கு அவரே பேசிக் கொண்டார்.

இதை அந்தப் பெண் கவனித்துக் கொண்டே இருந்தார். போனில் காதை வைத்தபடியே அந்தக் கடைக்காரர் ஓனரிடம் பேசுவது போல் பேசி, அந்தக் கடையில் இருந்த பணிப் பெண்ணிடம் ரூ.1500 வாங்கினார்.

‘அம்மா சரக்கு கோயம்பேட்டில் வந்திருக்கு. பணத்தைக் கட்டிட்டு நான் சரக்கு எடுத்துட்டு கடைக்கு வந்துடுறேன். அதான் சார் போன் பண்ணி சொன்னாங்க. நான் போய் சரக்கு எடுத்துட்டு வரேன்’ என்று சொல்ல அந்தப் பணிப் பெண்ணும் ‘ஓகே சார்….. சரக்கு எடுத்துட்டு வாங்க’ என்று சொல்லி விட்டு மறுபடியும் வாடிக்கையாளர்களிடம் கவனம் செலுத்தினாள்.

கடையின் முதலாளி அந்தப் பணிப் பெண்ணுக்கு போன் செய்தார் .

‘நம்ம வியாபாரம் எப்படி நடக்கிறது?’ என்று கேட்டார்

‘நல்லா நடக்குது சார். இன்னிக்கு இப்பக் கூட 2000 ரூபாய்க்கு வியாபாரம் நீங்க சொல்லிவிட்டதுனால நம்ம சரக்கு வாங்க 1500 ரூபாய் கொடுத்து விட்டேன்’ என்று சொன்னபோது முதலாளிக்கு தூக்கிவாரிப் போட்டது.

‘என் பேரு சொன்னானா இல்லையே, நான் யாரையும் சொல்லி அனுப்பலேயே’ என்றார் முதலாளி.

‘சார் சரக்கு வந்திருக்கு….. கோயம்பேட்டில் போய் எடுக்கணும்னு உங்க கிட்ட பேசிட்டு தான் ஒருத்தர் பணம் கேட்டார். எடுத்துக் கொடுத்தேனே?’ என்று அந்தப் பெண் சொன்னாள்.

‘இல்ல நான் சரக்கு அனுப்பல. யாரோ உன்கிட்ட பொய் சொல்லி இருக்காங்க’ என்று முதலாளி சொன்னார்.

‘சார் என்ன சொல்றீங்க?’ என்று விழிபிதுங்கினாள் அந்தப் பணிப் பெண்.

‘உன்னைய யாரோ சரியா ஏமாத்தி இருக்காங்க. யாருன்னு கண்டுபிடி’ என்று முதலாளி சொன்னபோது ….. சற்று தொலைவில் 25 ரூபாய்க்கு நாட்டு சர்க்கரை மிட்டாய் வாங்கியவனும் அந்தப் பணிப் பெண்ணிடம் 1500 ரூபாய் பெற்றுக் கொண்டவனும் பணத்தைச் சரி பாதியாகப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

‘பாத்தாயா 25 ரூபாய் முதல் போட்டோம். 1500 கெடச்சிருக்கு. இதுதான் இப்ப புது உத்தி. யாரை எங்கே எப்படி அடிக்கணும்னு தெரிஞ்சிடுச்சா? இன்னும் கொஞ்ச நாள்ல நாம கோடீஸ்வரன் ஆகலாம். வா அடுத்த கடைய பாப்போம் ’ என்று இருவரும் புறப்பட்டு மெதுவாகச் சென்றார்கள்.

வேகமாகப் பின்னால் ஓடிவந்த கடைப் பெண்ணிடம் வசமாக மாட்டிக் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *