சிபிஐ விசாரணைக்கு நாராயணசாமி வலியுறுத்தல்
புதுச்சேரி, ஜூன் 18–
புதுவை வனத்துறை அமைச்சருடைய மகளுக்கு சொந்தமான இடத்தில் இருந்து 6.2 டன் சந்தன கட்டைகளை தமிழ்நாடு வனத்துறை பறிமுதல் செய்துள்ளது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:–
“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணித்திருக்கிறார். இதிலிருந்து பா.ஜ.க – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருக்கிறதா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதை புதுச்சேரி மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. குறிப்பாக பீகார் மற்றும் குஜராத் மாநிலத்தில் அதிகளவில் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற மாணவர் சேர்க்கையே மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இருந்தது.
நீட்டை ரத்து செய்ய வேண்டும்
ஆனால் தற்போது நீட் தேர்வு வசதி படைத்தவர்களுக்கு மட்டும் பயனுள்ளதாக உள்ளது. லஞ்சம் கொடுத்து மருத்துவ இடங்களை பெறுகின்றனர். நீட் தேர்வால் நாட்டில் பல உயிர்களை நாம் இழந்துள்ளோம். நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதை ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால் உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
புதுச்சேரியில் வனத்துறை அமைச்சருடைய மகளுக்கு சொந்தமான இடத்தில் இருந்து, சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6.2 டன் சந்தன கட்டைகளை தமிழ்நாடு வனத்துறை பறிமுதல் செய்துள்ளது. எந்தவித அனுமதியும் இல்லாமல் அந்த தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. அதனால் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். சந்தன கட்டைகள் விவகாரத்தில் தெளிவான அறிக்கையை புதுச்சேரி அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.