புதுச்சேரி, டிச.3-
புதுவை, காரைக்காலில் தலா ரூ.5 ஆயிரம், விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம், பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் மழை நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுவையில் ‘பெஞ்ஜல்’ புயல் கோரத்தாண்டவமாடியது. வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக கடந்த வாரம் முழுவதும் மழை பெய்து புதுவையை வாட்டி வதைத்தது. அதிலும் கடந்த 30-ந்தேதி அன்று ‘பெஞ்ஜல்’ புயல் கரையை கடந்த போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதுடன் 49 செ.மீ. அளவிற்கு பலத்த மழை கொட்டியது.
இதில் குடியிருப்புகள், வயல்களை வெள்ளம் சூழ்ந்தது. 10 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டு பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. உயிர்சேதம், பொருட்சேதம் என பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மழை பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று தினமும் முதலமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார். இந்தநிலையில் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் பெஞ்ஜல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுவினரும், 70 ராணுவத்தினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். புதுவை மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் (குடும்பத்தினர்) தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். இந்த நிவாரணம் 3 லட்சத்து 54 ஆயிரம் குடும்பத்தினருக்கு கிடைக்கும்.
மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். உயிரிழந்த 4 மாடுகளுக்கு தலா ரூ.40 ஆயிரம், 16 கிடேரி கன்றுகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.
சேதமடைந்த 50 படகுகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், 15 கூரை வீடுகளுக்கு தலா ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும். ஆடுகள் உயிரிழப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கப்படும். தற்போது ரூ.210 கோடிக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணம் உடனடியாக வழங்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.