புதுவை, ஏப். 7–
புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 273 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் ஒருவர் கொரோனாவால் தற்போது உயிரிழந்துள்ளது வருத்தமளிக்கிறது. தொற்று பரிசோதனை செய்யும் போது 15 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
சேனிடைசர் அவசியம்
கடற்கரை, சந்தை, திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். பொதுத்தேர்வு நடைபெறும் மையங்கள் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், சேனிட்டைசர்கள் வைக்க வேண்டும்.
பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணை படி தேர்வு நடைபெறும், தேர்வு நேரங்களில் கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அனைவரும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். பாதுகாப்புக்காக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 36 பேர், காரைக்காலில் 34 பேர், ஏனாமில் ஒருவர் என 71 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.