சிறுகதை

புதுமைக் கிறிஸ்துமஸ் | கரூர் அ. செல்வராஜ்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக புத்தாடை வாங்குவதற்கான பேச்சை தொடங்கினார் ஸ்டான்லி. வீட்டில் இருந்த மனைவி ஸ்டெல்லா, மகள் சோபியா, மகன் ஜோசப் ஆகியோரிடம் அவரவர் விருப்பத்தை சொல்லக் கேட்டுக்கொண்டார்.

மனைவி ஸ்டெல்லா முதலில் பேச்சை ஆரம்பித்தாள்.

” என்னங்க”?

” சொல்லு ஸ்டெல்லா “

” இந்த வருஷம் புதுசா ஒரு புடவை வந்திருக்காங்க. அதைத்தான் நீங்க எனக்கு வாங்கி தரணும்”

” அந்தப் புடவை விலை என்ன?”

“750 ரூபாய்”

“சரிம்மா, அதையே வாங்கிக்க”

மனைவியின் மன விருப்பத்தை அறிந்துகொண்ட ஸ்டான்லி அடுத்ததாக மகள் சோபியாவை அழைத்தார்.

” சோபியா!”

” சொல்லுங்க டாடி “

” உனக்கு என்ன வேணும்?”

” புது மாடல் சுடிதார் “

” சோபியா! உனக்கு வயசு 20 ஆச்சு. இந்த வருஷ கிறிஸ்துமஸ் பண்டிகைக்காவது புடவை வாங்கிக்க கூடாதா?”

” டாடி! எனக்குப் புடவை பிடிக்காது. ஏன்னா, அதை கட்டறது ரொம்பக் கஷ்டம் “

“ஏன்மா, உங்க அம்மாகிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்க வேண்டியது தானே”

” அடுத்த வருஷம் வாங்கிக்கிறேன் டாடி”

” சரி சோபியா “

மகள் சோபியாவுக்கு சுடிதார் வாங்க முடிவு செய்த ஸ்டான்லி அடுத்ததாக மகன் ஜோசப்பை அழைத்தார்.

“ஜோசப்!”

“சொல்லுங்க டாடி “

” இந்த வருஷம் கிறிஸ்துமஸ்த்துக்கு உனக்கு என்ன டிரஸ் வேணும்?”

” அப்பான்னு சொல்ல ஆசைப்பட்டாலும் வழக்கமாக கூப்பிடற மாதிரி டாடின்னு கூப்பிடறேன். சரி, அது இருக்கட்டும் டாடி. இந்த வருஷம் கிறிஸ்துமஸ்த்துக்கு எனக்கு புதுசா டிரஸ் எதுவும் வேண்டாம். ஏன்னா, இந்த வருஷம் ஸ்கூலே திறக்கலை, அதுமட்டுமல்ல டயட், டிரஸ் எனக்கு நிறைய இருக்குது. ஊரடங்கு காலம் அதிகமாக இருந்ததால் சொந்தக்காரங்க வீட்டுக்கு நாம நம்ம குடும்பத்தோட எங்கேயும் போகல. ஏற்கனவே வாங்கிய 3 செட் டிரஸ் இன்னும் புத்தம் புதுசாக இருக்கு டாடி. அதிலே 2 டிரஸ்சை எடுத்து ஒரு டிரஸ்சை கிறிஸ்மஸ்க்கும் இன்னொரு டிரஸ்சை 2021ம் ஆண்டு புது வருஷத்துக்கும் போட்டுக்கறேன் டாடி” என்றான் ஜோசப்.

மகன் ஜோசப்பின் புதுமையான சிந்தனையை கேட்டு வியப்படைந்த ஜோசப்பின் அப்பா மகனிடம் மீண்டும் பேசத் தொடங்கினார்.

” ஜோசப்! இந்த சின்ன வயசுல பெரிய மனுஷன் மாதிரி பேசறது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. அது சரி, உன்கிட்ட புதுசா இருக்குற 3-வது டிரஸ்சை என்ன செய்யப் போறே?”

” டாடி!”

” சொல்லுப்பா ஜோசப் “

” டாடி, கொரோனா தீவிரமா இருந்த காலத்திலே 7 மாசமா நம்ம வீட்டு வேலைக்காரி வசந்தா அம்மாவை வேலையிலிருந்து நீக்கி இருந்தோம். இப்பதான் போன மாதத்திலிருந்து மறுபடியும் வேலைக்கு வர்றாங்க. அந்த அம்மா மகன் சிவகுமாரும் நானும் இந்த வருஷம் 10ம் வகுப்பு. ஆனா, அவன் அரசாங்க ஸ்கூல்ல படிக்கிறான்.

சிவகுமாருக்கு நல்ல டிரஸ் இல்லே. அதனால அவனுக்கு என்கிட்ட இருக்கிற 3 வது புது டிரஸ் கிறிஸ்துமஸ் பரிசாக தர போறேன். அதுமட்டுமல்ல. எனக்கு நீங்க அவ்வபோது கொடுத்த சொந்த செலவுக்கு பணம் அதாவது பாக்கெட் மணி 550 ரூபாய் இருக்கிறது. அந்தப் பணத்தை உண்டியலில் போட்டு வைத்திருந்து / அந்த பணத்திலிருந்து ஒரு சட்டையும் செருப்பும் வாங்கிக்கன்னு சிவகுமாருக்கு சொல்லப்போறேன். அவன் விருப்பப்பட்டா கடைக்கு அழைச்சிட்டு போறேன் டாடி” என்றான் ஜோசப்.

மகனைப் பாராட்டிய ஸ்டான்லி, ஜோசப்பின் விருப்பபடியே செய்ய அனுமதி வழங்கியதோடு வேலைக்காரி வசந்தாவின் குடும்பத்தை கிறிஸ்மஸ் விருந்துக்கு அழைத்துச் சிறப்புச் செய்தார். மன்னன் கிறிஸ்து மாட்டுக் குடிலில் ஏழை கோலத்தில் குழந்தையாக பிறந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது தானும் தன் குடும்பத்தார் மட்டும் மகிழ்வது அல்ல. அடுத்தவர்களையும் சரிசமமாய் மதித்து மகிழ்விக்கும் பண்டிகை என்பதை மகன் ஜோசப் உணர்ந்து கொண்டதை நினைத்து நினைத்துப் பெருமை அடைந்தார் ஸ்டான்லி.

ஜோசப் வீட்டு கிறிஸ்துமஸ் பண்டிகை புதுமையாய் மாறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *