செய்திகள்

புதுச்சேரி ஆரோவில்லில் 3 ஆயிரம் பேர் மாரத்தான் ஓட்டம்: நடிகை அமலாபால் 21 கி.மீ. தூரம் ஓடினார்

வானூர், பிப்.11-

ஆரோவில் சர்வதேச நகரில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் நடிகை அமலாபால் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச நகரில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்று மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டிகள் 40 கிலோ மீட்டர் , 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என மொத்தம் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் 40 கிலோ மீட்டர் தூரபோட்டி அதிகாலை 4.30 மணி அளவிலும், மற்ற போட்டிகள் காலை 6 மணிக்கும் தொடங்கின.

21 கிலோ மீட்டர் தூர பிரிவில் நடிகை அமலாபால் பங்கேற்று இலக்கை அடைந்தார். அவரை பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்றனர். அமலாபாலுக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது. அப்போது அவருடன் பலர் ஆர்வத்துடன் செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டனர்.

தமிழக ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையிலான ரெயில்வே போலீசாரும், பெண் கமாண்டோ படையினரும் கலந்து கொண்டு ஓடினர். தமிழ்நாடு முதன்மை வனக்காப்பாளர் மாலிக் தலைமையில் வனத்துறையினர் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாரத்தான் ஆர்வலர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

சிறுவனை கட்டித் தழுவினார்

சைலேந்திரபாபு

ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுடன் 3 பெண் கமாண்டோக்கள் உள்ளிட்ட 17 பேர் உள்பட ஏராளமானவர்கள் ஓடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட இலக்கை அடையவில்லை. சைலேந்திரபாபுவுடன் சேர்ந்து ஓடிய ஒரு சிறுவன் இலக்கை அடைந்தான். அந்த சிறுவனை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கட்டித்தழுவி ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.

அந்த சிறுவன் ஆரோவில் அருகே உள்ள இடைஞ்சாவடி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்களான செல்வம், ஜெயமாலா தம்பதியரின் மகன் ஆவார். இடையஞ்சாவடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *