செய்திகள்

புதுச்சேரியில் பல்கலைக்கழக முதல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து

புதுவை, ஜூலை 24–

ஜூலை 26 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த, முதல் செமஸ்டர் தேர்வுகளை புதுச்சேரி பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.

கொரோனா காரணமாக கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்படுகின்றன. புதுச்சேரியில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ஜூலை 26ஆம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான அறிவிப்புகளையும் பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைப்பு கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது.

முதல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து

இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் லாசர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூலை 26 ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது . அது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இளங்கலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் முதுகலை முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இண்டர்னல் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். மூன்றாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும். அதற்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், தேர்வுகளுக்கு பதிவு செய்தல், தேர்வு கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஏற்கனவே தரப்பட்டுள்ள அட்டவணைப்படி பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *