புதுச்சேரி, ஆக. 10–
கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நேற்று இரவு 2 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் நகரப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது.
ஜீவானந்தபுரம் ஓடையில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில், அப்பகுதியைச் சேர்ந்த நபர் அடித்துச் செல்லப்பட்டார். அந்த நபரை மீட்புக் குழுவினர் நகரப் பகுதியில் இருக்கும் அனைத்து வாய்க்காலிலும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலை முழுவதும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், மழை நீர் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்தது.
இந்நிலையில், கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பும் நடத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.