திண்டிவனம், ஏப். 14–
புதுச்சேரியிலிருந்து நூதன முறையில் மதுபானங்களை கடத்தி வந்து 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி பஸ் நிலையம் அருகே திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வதுரை மற்றும் பெண் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்த 2 பெண்களை போலீசார் அழைத்து விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அவர்களை பெண் போலீசார் சோதனை செய்தபோது 2 பெண்கள் காலில் டேப்புகள் அணிந்து புதுவையில் இருந்து 240 மதுபாட்டில்களை நூதன முறையில் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்கள் செஞ்சி பகுதியை சேர்ந்த யசோதா (77), சின்ன பாப்பா (44) ஆகியோர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இவர்கள் புதுவையில் இருந்து மதுபானங்களை கடத்தி செஞ்சி பகுதிக்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட யசோதா மீது சுமார் 15-க்கும் மேற்பட்ட மதுபானங்கள் கடத்திய வழக்கும் சின்ன பாப்பா மீது சுமார் 20-க்கும் மேற்பட்ட மதுபானங்கள் கடத்திய வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.