சிறுகதை

புதிய விருந்தாளி | ராஜா ராமன்

Spread the love

அந்தப் பெரிய வீட்டில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
வீட்டின் உரிமையாளர் இராமசாமி ஐயா வேலையாள் பன்னீரை அழைத்தார்.
‘பன்னீர்,பன்னீர்’ என்று உரக்கக்குரல் கொடுத்தார். இராமசாமி ஐயாவின் பெரிய வீட்டின் பின்னால் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பன்னீர் ஓடி வந்தான்.
‘ சொல்லுங்க ஐயா , சொல்லுங்க’
நம்ம சொந்த பந்தங்களுக்கு சொல்லிட்டியா என்று கேட்டார் இராமசாமி ஐயா.
‘சொல்லிட்டேன் ஐயா’
‘மாடியில் ஒரு ரூம்பில் பெயிண்ட் அடிக்காமல் இருந்துச்சே அதை அடிக்கச்சொல்லிடியா’
‘அடிச்சிட்டாங்க ஐயா’
‘சமையல் காரங்களுக்கு சொல்லிட்டியா’
‘சொல்லிட்டேன் ஐயா’
‘நாளைக்கு அந்த சமையல்காரர்கள் சரியா காலையில 5 மணிக்கு வந்துருவாங்களா?’’
‘‘வந்துருவாங்க ஐயா’
‘சரி… நாளைக்கு அதிகாரிகள் எல்லாம் சரியா 10 மணிக்கு வந்துருவாங்க. எல்லா ஏற்படும் சீரும் சிறப்புமாக இருக்கனும் பா’
‘சரிங்க ஐயா’
ஐயாவின் பெரிய தங்கச்சி பிரகதாம்மாள் . அவர்களும் அவர்கள் வீட்டுக்காரரும் குழந்தைகள் எல்லாரும் வந்து விட்டார்கள். அவர்களைத்தொடர்ந்து ஐயாவின் தம்பிகள் வரதராஜன், காளைராஜன்,ரெத்தினம், வேலு ஆகியோர் அவரவர் குடும்பத்தோடு வந்து விட்டார்கள்.
வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் என்னைக்கும் இல்லாம அன்னைக்கு அந்த பெரிய வீட்டின் திண்ணை, முத்தம், வரண்டா, அறைகள் ஆகியவற்றை ஓடிஓடி அதிசயமாக பார்த்தார்கள்.
சமையல் செய்யும் இடத்திற்கு சென்ற இராமசாமி ஐயா தயாராகிக்கொண்டிருந்த ஒவ்வொரு பதார்த்தத்தை ருசித்துப்பார்த்தார்.
தலைமை சமையல் காரரை பார்த்து ‘உங்க எல்லாருக்கும் சம்பளத்தோடு வேட்டி ,சேலையெல்லாம் எடுத்துவச்சிருக்கேன் போகும் போது மறந்திராம வாங்கிட்டுப்போங்க .அப்பறம் சமையல் சுத்தமாகவும் சுவையாகவும் இருக்கனும். வேலையை நல்லாப் பாருங்க….’
‘சரிங்கையா’
‘டே பன்னீர்’
பன்னீர் ஓடி வந்து ‘ஐயா என்றான்’
‘எல்லா மாட்டுபாலையும் கரந்து சமையல் காரரிடம் கொடு . அவர் காப்பி போட்டுக்கொடுப்பார் அதை கொண்டுபோய் வந்திருக்கிற விருந்தாளிக்கெல்லாம்.கொடு .உனக்கு ஒத்தாசைக்கு மூர்த்தியை கூட்டிக்க’
‘சரி ஐயா’
காலை மணி பத்தானது.
ஐயா பரப்பரப்பின் உச்சக்கட்டத்திற்கே சென்றுவிட்டார். ஐயாவின் உபசரிப்பாலும் பாசத்தாலும் வந்தவர்களெல்லாம் திக்குமுக்காடி போனார்கள்.
ஐயா எதிர்பார்த்தப்படி சமையல் வேலையெல்லாம் முடிந்துவிட்டது.
வாசலில் ஜீப் சப்தம் கேட்டது.
தலைகால் புரியாமல் மகிழ்ச்சியோட ஓடி வந்தான் பன்னீர்.
‘ஐயா அதிகாரிகள் வந்திட்டாங்கய்யா ….’
சரிடா எல்லா ஏற்பாடையும் பண்ணு.
வீட்டின் முன்னால் வந்து நின்ற ஜீப்பிலிருந்து ஓரு உயர் அதிகாரி உட்பட் ஐந்து பேர் இறங்கிறார்கள்.
இராமசாமி ஐயா தன் சொந்த பந்தங்களுடன் அவர்களை வரவேற்றார்.
உள்ளே வந்த அதிகாரியிடம் ஐயா கேட்டார்.
‘சார் எல்லாமே இன்னைக்கு வந்துருமா’
‘வந்துரும் ஐயா’ என்று சொல்லிவிட்டு தன் வேலையை கவனித்தார் ’உயர் அதிகாரி.அவரோடு வந்திருந்த ஊழியர்களை அங்குமிங்கும் விரட்டி அதிரடியாக வேலை வாங்கி செய்திருந்த ஏற்பாட்டை செம்மையாக செய்து முடித்தார்.
திண்ணையில் ஒரு ஓரத்தில் புதிதாக சுவற்றில் அமைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் போர்டு அருகே ஐயாவைக் கூட்டிச்சென்றார் அந்த அதிகாரி. தன் கையில் வைத்திருந்த பீஸ் கேரியரை எலெக்ட்ரிக் போர்டில் சொருகினார்.
‘ஐயா இந்த மெயின் சுட்சை நீங்க போடுங்க’
‘வேணாம்,வேணாம் சார் நீங்களே போடுங்க சார். எனக்கு பயமாயிருக்கு’
‘பயப்படாதீங்க சார். பக்குவமா பயன்படுத்தினா உங்க வீட்டு பன்னீர் போல தான் ஐயா. சொன்ன வேலையைச் செய்யும்; ஆனா அதுக்கிட்ட எசகுபெசகா நடந்துகிட்டா அது தன் வேலையைக்காட்டிவிடும். அதனால ஜாக்கிரதையா கையாளுங்கய்யா’
முகத்தில் மகிழ்ச்சியுடன் இராமசாமி ஐயா மெயின் சுவிட்சை போட்டார். வீட்டில் முதல்முறையாக மாட்டப்பட்டிருந்த பல்புகள் எரிந்தன, ஃபேன்கள் வேகமாக சுற்றி வீடு முழுவதும் பூந்தென்றல் காற்றைப் பரவ விட்டது.
ஐயா வீட்டு ஹால் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தினசரி காலாண்டரின் தாள் தல்லாடியது. அதில் தேதியானது 3.1.1957 என்றிருந்தது.
அந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் இருக்கும் மிகப்பெரிய வசதிக்காரரான இராமசாமி ஐயா தான் முதன்முறையாக மின்சார இணைப்பை வாங்கி அதை பெரிய விழாவாகவே கொண்டாடிவிட்டார்.
அதைக்கண்டு சொந்த பந்தங்கள் மட்டுமல்ல அந்த கிராமமே ஆச்சரியத்தில் மூழ்கியது.
அதுவரை இரவில் மின்சார விளக்கை பார்க்காத அந்த கிராமக்கள் ஐயா வீட்டில் எரிந்த மின் விளக்கு வெளிச்சத்தைப் பார்த்துப் பார்த்து சொக்கிப்போனார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *