அறிவியல் அறிவோம்
நாசா முதல் உணவகம் வரை தற்போது ரோபோக்களின் பயன்பாடு நடைமுறைக்கு வந்துவிட்டது. இதில் மேலும் ஒரு புதுமையாக வங்கி வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்ற உதவும் ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனைக் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். ஐந்து லட்சம் ரூபாய் செலவில் எட்டுமாதகால உழைப்பில் உருவான ரோபோ பல சிறப்புகளைக் கொண்டிருக்கிறது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியில் கே.எல்.இ தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆட்டோமேஷன் மற்றும் ரோபாட்டிக்ஸ் துறையில் பிருத்வி தேஷ்பாண்டே, ஆல்வின் என்ற மாணவர்கள் படித்து வருகின்றனர். இவ்விருவரும்தான் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்ற ரோபோ ஒன்றை உருவாக்கியவர்கள். அக்கல்லூரி பேராசிரியர் அருண் தலைமையில் தலா இரண்டு உதவி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் அடங்கிய குழு ரோபோ வடிவமைப்பில் ஈடுபட்டது.
இந்த ரோபோவிற்கு `மாயா’’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 15 கிலோ எடை கொண்ட ரோபோ எட்டு முதல் பத்து மணி நேரம் வரை இயக்கக்கூடிய பேட்டரி ஆற்றலைச் சேமித்து வைத்துக்கொள்ளும் திறனுடையது. வங்கி அலுவலக நேரம் முடிந்த உடன் தானாகவே குறிப்பிட்ட இடத்திற்கு நகர்ந்து சென்று சார்ஜ் செய்துகொள்ளும் இதற்கு மனித ஆற்றல் தேவையே கிடையாது. புதிய வங்கி கணக்கு தொடக்கம் உள்ளிட்ட பணிகளுக்கு ரோபோ வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மூலம் வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் தேவையை அறிந்து ரோபோ பதிலளிக்கிறது. இதற்காக ரோபோவின் உடலில் பிரத்யேக திரை அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு மொழிகளில் பேசும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருங்காலத்தில் வாடிக்கையாளர்களின் நிகழ்காலப் பிரச்னைகளை அறிந்து புதிய வசதிகளை வழங்கக் கண்டுபிடிப்புக் குழு திட்டமிடப்பட்டுள்ளது. இதை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளத் தொழில் நிறுவனங்களுக்கு கே.எல்.இ தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி நிர்வாகம் அழைப்பு விடுத்திருக்கிறது.