முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி
சென்னை, மார்ச் 21–
புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ. 1500 கோடி ஒதுக்கீடு செய்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் க.அருள் சங்கு, மாநில பொதுச்செயலாளர் வெ. சரவணன், மாநில பொருளாளர் த.ராமஜெயம்ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டசபையில் நேற்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் 18 லட்சம் தொடக்க பள்ளி மாணவர்கள் பயன் பெறுகின்ற வகையிலே ரூபாய் 500 கோடி ஒதுக்கி முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அனைத்து அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் நான்காம் மற்றும் ஐந்தாம் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவு படுத்தப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மனதார வரவேற்று பாராட்டுகிறது.
தமிழ்நாடு அரசின்கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், பழங்குடியினர் பள்ளிகள், கள்ளர் பள்ளிகள் , சீர் மரபினர் அறநிலையத்துறை பள்ளிகள் ஆகிய அனைத்தும் இனி பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பையும், அனைத்து அரசு பணியாளர்களுக்கும் வீடு கட்ட முன்பணம் ரூபாய் 40 லட்சத்திலிருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும், பேராசிரியர் அன்பழகனார் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூபாய் 1500 கோடி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பையும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மனதார வரவேற்று நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.