பாம்பன் வழியாக கப்பல்கள் செல்ல தடை
ராமேசுவரம், மே.27-–
புதிய ரெயில்பாதை தூக்குப்பாலம் பொருத்தும் பணி நடந்து வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை பாம்பனில் கப்பல்கள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் பாம்பன் ரெயில் பாலம் அமைக்கப்பட்டு, 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே அதற்கு பதிலாக புதிய ரெயில் பாலம் பாம்பன் கடல் பகுதியில் அமைக்க முடிவானது.
இந்த பாலத்தின் அருகில் சுமார் 50 மீட்டர் தூரத்தில் வடக்கு கடல் பகுதியில் ரூ.545 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது.
புதிய ரெயில் பாலத்தின் முக்கிய பணியான மையப் பகுதியில் செங்குத்து வடிவிலான தூக்குப்பாலத்தை வைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அதற்காக பாம்பன் பகுதியின் நுழைவுப் பகுதியில் இருந்து 77 மீட்டர் நீளமும், சுமார் 600 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலத்தை தூண்கள் வழியாகவே நகர்த்தி கொண்டு வந்தனர். இந்த பணி கடந்த 2 மாதமாக நடந்தது.
இன்னும் சில நாட்களில் புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூண்கள் மீது புதிய தூக்குப்பாலம் பொருத்தப்பட உள்ளது.
இதற்காக பாம்பன் பாலத்தின் வழியாக கப்பல்கள், படகுகள் செல்லும் பாதையின் நடுவில் இரும்பு குழாய்கள் அமைத்து மேடை கட்டும் பணி தொடங்கியுள்ளது. அது முடிந்தவுடன், அங்கு செங்குத்து வடிவிலான புதிய தூக்குப்பாலத்தை பொருத்த ரெயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
எனவே அங்கு தொடர்ந்து பணிகள் நடப்பதால், மறு அறிவிப்பு வரும் வரை அந்த வழியாக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் போன்றவை செல்ல அனுமதி கிடையாது என்றும் தூக்குப்பாலம் திறக்கப்பட மாட்டாது என்றும் ரெயில்வே துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.