புதுடெல்லி, ஏப்.19-
ராணுவ தளபதி எம்.எம்.நரவானே இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். புதிய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே, கடந்த டிசம்பர் 31-ந் தேதியில் இருந்து அப்பொறுப்பை வகித்து வருகிறார். அவர் இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து, தற்போதைய ராணுவ துணை தளபதி மனோஜ் பாண்டே, புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நாட்டின் 29-வது ராணுவ தளபதி ஆவார். மே 1ந் தேதி, அவர் புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுக் கொள்வார் என்று இந்திய ராணுவம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளது.
ராணுவ என்ஜினீயர் பிரிவில் இருந்து ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட முதல் அதிகாரி இவரே ஆவார்.
மனோஜ் பாண்டே, இங்கிலாந்தில் கேம்பர்லியில் உள்ள கல்லூரியில் படித்தவர். இந்தியாவில், தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார். 1982ம் ஆண்டு, இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவ என்ஜினீயர் படைப்பிரிவில் இணைந்தார்.
இந்திய ராணுவத்தில் தனது 39 ஆண்டு கால பணியில், பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சீனாவுடனான எல்லை கோட்டு பகுதியில் பணியாற்றி உள்ளார். காஷ்மீரில் காலாட்படை பிரிவிலும், மேற்கு லடாக்கில் உயர்ந்த மலைப்பகுதிகளிலும், வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் பணியாற்றி இருக்கிறார்.
சீனா, மியான்மர், வங்காளதேசம் ஆகிய நாடுகளுடனான எல்லை பகுதிகளில் பணி புரிந்துள்ளார். எத்தியோப்பியா, எரித்ரியா ஆகிய நாடுகளில் உள்ள ஐ.நா. தூதரகங்களில் தலைமை என்ஜினீயராக இருந்துள்ளார். தென் பிராந்திய ராணுவ தளபதியாக இருந்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021ம் ஆண்டு மே மாதம்வரை அந்தமான் பிராந்திய தளபதியாகவும், 2021ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம்வரை கிழக்கு பிராந்திய ராணுவ தளபதியாகவும் இருந்தார். கடந்த பிப்ரவரி 1ந் தேதியில் இருந்து ராணுவ துணை தளபதியாக பணியாற்றி வருகிறார்.
பரம் விசிஷ்ட் சேவா பதக்கம், அடி விசிஷ்ட் சேவா பதக்கம், விசிஷ்ட் சேவா பதக்கம் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.