செய்திகள்

புதிய மதுரை ஆதீனமாக ஹரிஹரர் தேசிகர் தேர்வு: 10 நாளில் முடிசூட்டு விழா

மதுரை, ஆக. 14–

மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியாக, ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் சைவ சமயத்தை வளர்க்கவும், மக்களிடம் சைவக் கருத்துக்களை பரப்பவும் திருஞான சம்பந்தரால் இந்த ஆதீனம் உருவாக்கப்பட்டது. இவருக்குப் பிறகு குரு சீடர்கள் ஒவ்வொருவர் மூலமும் இந்த ஆதீனம் வளர்ச்சியை கண்டது. 292 ஆவது குரு மகா சன்னிதானமாக இருந்த அருணகிரிநாதர், தனக்குப் பிறகு இளைய சன்னிதானமாக திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தாவை நியமித்தார்.

புதிய ஆதீனம் நியமனம்

இதில் சில சர்ச்சைகள் ஏற்பட்டதால் பின்னர் அவரை நீக்கினார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையில் தற்போது சுந்தரமூர்த்தி தம்பிரான் என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டில் இளைய மடாதிபதியாக நியமித்து, பட்டமும் சூட்டியதாகவும், இவர் திருவாவடுதுறை ஆதீனத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர் எனவும் மதுரை ஆதீனம் நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது.

அதாவது திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளுக்கு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் என பெயர் மாற்றம் செய்து அவரை ஆதீனமாக நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மதுரை ஆதீனமாக ஹரிஹரர் தேசிகருக்கு 10 நாளில் முடிசூட்டப்பட உள்ளதாக திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீன மடத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் ஏராளமான சொத்துகள் உள்ளன. இதனால் இப்பொறுப்புக்கு முக்கியத்துவம் உண்டு என்றும் பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *