செய்திகள்

புதிய ப்ரைவஸி கொள்கை:‘வாட்ஸ்அப்’ மீது சட்டப்படி நடவடிக்கை ?

புதுடெல்லி, மே. 20-

வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய தனியுரிமை கொள்கையானது நியாயமற்றது என்றும் அந்தக் கொள்கையை வாட்ஸ்அப் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு புதிய தனியுரிமை கொள்கையை அறிவித்தது. அதில், வாட்ஸ் அப்பில் பகிரப்படும் தகவல்கள், அதன் தாய் நிறுவனமான ‘பேஸ்புக்’ பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தன.

இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளாதவர்கள், வாட்ஸ் அப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 15-ந்தேதி, இந்த கொள்கை அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், கடும் எதிர்ப்பு எழுந்ததாலும், டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதாலும் இக்கொள்கையை அமல்படுத்துவதை ‘வாட்ஸ் அப்’ நிறுவனம் தள்ளிவைத்தது.

மத்திய அரசு உத்தரவு

இந்த நிலையில், புதிய தனியுரிமை கொள்கையை வாபஸ் பெறுமாறு வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஏராளமான இந்தியர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தகவல் பகிர்வுக்கு வாட்ஸ் அப்பை சார்ந்தே இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, நியாயமற்ற நிபந்தனைகளை இந்திய பயனாளர்கள் மீது வாட்ஸ் அப் திணிக்க பார்ப்பது பொறுப்பற்ற செயல். அதிலும், ஐரோப்பிய பயனாளர்களுடன் ஒப்பிடுகையில், இந்திய பயனாளர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள்.

தனியுரிமை கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்கள் இந்தியர்களின் நலன்களுக்கும், உரிமைகளுக்கும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது. இந்த கொள்கை, இப்போதுள்ள இந்திய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளது. ஆகவே, இதை வாபஸ் பெற வேண்டும் என்று மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இக்கடிதத்துக்கு 7 நாட்களில் வாட்ஸ் அப் பதில் அளிக்க வேண்டும். திருப்திகரமான பதில் வராவிட்டால், சட்டத்துக்கு உட்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியர்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நிறைவேற்ற சட்டப்படி எல்லா வாய்ப்புகளையும் அரசு பரிசீலிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *