சிறுகதை

புதிய பூபாளம் (ராஜா செல்லமுத்து )

எப்படி முயன்றும் தன் அழுகையை அடக்க முடியாமல் அழுது கொண்டே இருந்தாள் பூமகள்.
அவள் பெயரைப் போலவே அவளின் வனப்பும் வசதியாகவே இருந்தது.
இருந்துமென்ன ஒரு முறையற்ற வாழ்க்கையே அவளுக்கு வாய்த்திருந்தது. அந்த முறையற்ற வாழ்க்கையின் முன்னுரையை அவள் முழுமையாகச் சொல்லவில்லை என்றாலும் அவள் அடிமனதில் ஆழத்தில் கடலலைகள் போல ஓயாமல் அடித்துக் வழிய வழிய அழுது கொண்டிருந்தவளை பாவமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள் மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் மதுமிதா.
நிமிர்ந்து பார்க்கக் கூடத் திராணியில்லாமல் உட்கார்ந்திருந்தாள் பூமகள்.
‘‘பூமகள் …. பூமகள்….’’
மதுமிதாவின் பேச்சு அவளைத் தலை நிமிரச் செய்யவே இல்லை.
பூமகள் என்று அழுத்தம் திருத்தமாக கூப்பிட்ட போதும் அவள் திராணியற்றே இருந்தாள்.
அவள் அருகே சென்ற ஆய்வாளர் நான் கூப்பிடுறது உனக்கு கேக்கலையா? என்ற வார்த்தைக்கு அவளால் பதில் சொல்லவே முடியாமல் கண்ணீரை மட்டுமே உதிர்த்துக் கொண்டிருந்தாள்.
சாப்பிடுறியா? என்ற பேச்சுக்கும் அவள் தலையை மட்டுமே ஆட்டினாளேயொழிய தவறியும் வாய் திறக்கவே இல்லை.
என்ன பசிக்கலையா? என்று மதுமிதா கேட்ட போதும் அவள் பதிலே சொல்ல வில்லை.
தப்பு செஞ்சிருக்கீங்க. தண்டணை அனுபவிச்சுதானே ஆகணும். இத நீ செய்யுறதுக்கு முன்னாடியே யோசிக்கணும் . இப்ப அழுது எந்த பிரயோசனும் இல்லையே. சாப்பிடு….. என்று பிரியாணிப் பொட்டலத்தை அவளின் முன்னால் தள்ளி விட்டாள் மதுமிதா.
அதைப் பார்த்ததும் பூமகளுக்கு அழுகை மேலும் கூடியதேயொழிய அடங்கியபாடில்லை
பூமகள் இப்பவாவது சொல்றியா? என்று ஒரு ஆய்வாளராக இல்லாமல் அவளின் தோள் தொட்டுத் தோழியாகவே கேட்டாள்:
‘‘சொல்லு… உண்மையச் சொல்லு ’’என்று கேட்ட போது பூமகளுக்கு நா தழுதழுத்தது .
‘‘ம்ம் …’’என்று மதுமிதா கேட்ட போது மெல்ல வாய் திறந்தாள் பூமகள்:
‘‘ஆமா நான் தப்புச் செஞ்சது உண்மைதான். ஆனா…..’’ என்று இழுத்தவள் மேலும் பேச முடியாமல் தவித்தாள்.
ம்.சொல்லு எவ்வளவு வருசமா இதச் செஞ்சுக்கிட்டு இருக்க?
சரியா ஞாபகம் இல்ல
ஓ உனக்கு குடும்பம் ஏதும் இருக்கா?
இல்ல நான் தனிக்கட்டை தான்
ம் …ஒனக்கு அதுவும் ஒரு ஆளுக்கு சம்பாரிச்சு சாப்பிட முடியாமத்தான் இந்தத் தொழில் செஞ்சியா?
ஆமா என்பது போல் தலையாட்டினாள்.
வேற வேலைக்கு போயி வயித்த கழுவுறத விட்டுட்டு இதச் செய்றது அசிங்கமா இல்ல என்று மென்மையாகச் சொன்னவள் கையிலிருந்து பிரியாணியில் லெக் பீஸை லாவகமாக எடுத்துக் கடித்துக் கொண்டே பேசினாள்.
கன்னங்களை நிறைத்திருந்த கண்ணீரை முந்தானையை எடுத்துத் துடைத்துக் கொண்டாள் பூமகள் .
என்ன நான் சொல்றது கேக்குதா ? என்று வாயில் பிரியாணி இருக்க மதுமிதா பேசும் போது வார்த்தை அவ்வளவு தெளிவாகக் கேட்கலில்லை
என்ன பூமகள்… பதிலே இல்ல? என்று சொல்லிக்கொண்டே கீழே இருந்த தண்ணீர்ப் பாட்டிலை எடுத்து கடகடவெனக் குடித்தாள்.
அவள் குடிக்கும் போது தண்ணீர் துணைகள் அவளின் யூனிபார்மில் விழுந்து நனைத்தது.
பாதித் தண்ணீர் வாயிலும் பாதித் தொண்டையிலும் இறங்கிய போது ஆ ….வெனக் கத்தினாள் பூமகள்.
அவள் போட்ட சத்தம் காவல் நிலையத்தையே கலவரப்படுத்தியது.
சத்தம் கேட்டு ஓடி வந்தனர். சில பெண் காவலர்கள். அந்த மகளிர் காவல் நிலையம் அன்று கொஞ்சம் பரபரப்பாகவே இருந்தது.
பரவாயில்ல நீங்க போங்க என்று ஓடிவந்த பெண் காவலர்களை போகச் சொன்னாள் மதுமிதா.
ஏன் இப்படி கத்துன? என்று கொஞ்சங் கூடக் கோபமில்லாமலே கேட்டாள் மதுமிதா.
இப்ப நீங்க கேட்டீங்களே அந்தக் கேள்வி தான் என்னைய இவ்வளவு ஆக்ரோஷமா கத்த வச்சது.
ஏன் ?
இல்ல மேடம். நான் என்ன இந்த தரங்கெட்ட வேலைக்கு போகணுமுன்னு ஆசைப்பட்டா வந்தேன் .சூழ்நிலை துரோகம் ஏமாற்றம் இதெல்லாம் சேந்து தான் என்னைய இப்படி ஆக்கிப்புடுச்சு . நானும் நல்லா தான்
படிச்சேன் . எல்லா ஸ்டூடண்ட விடவும் நான் நல்ல மார்க் எடுத்தேன். நல்ல பேர் எடுத்தேன். ஒரு கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட்டேன். அங்க என்னோட படிப்ப விட என்னோட இளமைக்குத் தான் நூத்துக்கு நூறு மார்க் போட்டாங்க. ஆரம்பத்தில் அது எனக்குத் தெரியல. போகப் போகத்தான் இதப் பத்தி நான் தெரிஞ்சுக்கிட்டேன் .அந்த கம்பெனியோட மேனேஜர் என்னைய ஏமாத்திட்டு கைவிரிச்சுட்டான். எவ்வளவோ சொல்லிப்பாத்தும் அவள் என்னைய கல்யாணம் செய்ய முன் வரல. அதுக்கு மேலயும் என்னால அங்க வேல செய்யப் பிடிக்காம வெளியேறி வேற எடத்துல வேல தேட ஆரம்பிச்சேன். அங்கயும் இதே நிலைமை தான் அந்த முதலாளிக்கும் நான் அடங்கிப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு பொறுமை காத்தேன் .ஆனா முடியல ஒரு நாள் அவனும் என்னைய …. ஏமாத்திட்டான்.
தாங்க முடியல மேடம் வயசான அப்பா அம்மா படிக்கிற தங்கச்சி. எவ்வளவோ நாள் பசி பட்டினியோட கிடந்திருக்கோம் ;போற இடத்திலெல்லாம் எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதிரி தான். வேலைக்கு போயி இந்தப் பட்டத்த வாங்குறத விட நேரடியா இதையே செஞ்சா என்னென்னு தோணுச்சு அதான் . வேற வேலைக்கு போகப் போறதில்லன்னு முடிவு செஞ்சிட்டேன். ஆனா நான் இந்த தொழிலுக்கு வந்து ஒரு நாள் கூட ஆகல
மேடம் ;அதுக்குள் மாட்டிக்கிட்டேன்.
இந்த வேலை செய்றதுக்கு ஒரு ட்ரிக் வேணும் போல என்று அழுகையும் கண்ணீரும் கலந்து பேசினாள்
பூமகள் . அவள் பேசும் போது சிரிப்பும் கலந்தே வந்தது.
ம்ம்…. இது தான் உன்னோட கதையா? என்று மதுமிதா கேட்ட போது அசட்டுச் சிரிப்புச் சிரித்த பூமகள் மேடம் இந்த உலகம் ஒரு சுய நலம் ஓடுற சாக்கடை .இங்க எல்லாருமே ஏதோ ஒரு வகையில குற்றவாளி தான். ஆயிரம் கதைகள் என்னோட நெஞ்சுக்குள்ள நெருப்பா எரிஞ்சுக்கிட்டு இருக்கு. அதெல்லாம் உங்க கிட்ட சொல்ல முடியாது
மேடம்; அப்படி தான் சொன்னா கண்ணகியா நீங்க மாறி இந்த உலகத்தையே எரிச்சுடுவீங்க. அவ்வளவு கொடூரமானது இந்த உலகம்’’ என்று கொஞ்சங்கூடப் பயமில்லாமல் பேசினாள் பூமகள்.
அவள் பேசி முடிப்பதற்குள் பிரியாணி முழுவதையும் சாப்பிட்டு முடித்திருந்தாள் மதுமிதா
‘‘ம் …இப்பவாவது சாப்பிடு’’ என்று பிரியாணிப் பொட்டலத்தை எடுத்து பூமகளிடம் கொடுக்க அதை ஆவலாய் வாங்கிய பூமகள் வேக வேகமாகப் பிரித்துக் சாப்பிட ஆரம்பித்தாள்.
‘‘சரி.. சாப்பிட்டு வா.. ’’ மதுமிதா அவளின் அறைக்குச் சென்றாள்.
சிறிது நேரத்தில் சாப்பிட்டு முடித்த பூமகள் பளிச்சென மதுமிதாவின் முன்னால் வந்து நின்றாள்.
என்ன வயிறு நெறஞ்சதா?
ம் ….என வேகமாகத் தலையாட்டினாள்.
நீ போகலாம்
எங்க மேடம்?
உன்னோட வீட்டுக்கு. அப்ப எனக்குத் தண்டனை என்ற பூமகள் பேச்சைக் கேட்ட மதுமிதா கடகடவெனச் சிரித்தாள்.
ஏன் சிரிக்கிறீங்க?
நீ போ . ஒன்னைய நான் விடுதலை செய்கிறேன். . இங்க ஆயிரக்கணக்கான தவறுகளுக்கு தண்டனை தராமத்தானிருக்கோம். இனிமே உங்கிட்ட தவறா நடக்க முயற்சி செய்ற ஆளுகளோட விபரத்தை
கொண்டு வா . அவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்றேன்.
உன்னோட தவறு அவ்வளவு பெருசு இல்ல.
போ…ஒரு புதுவாழ்க்கைய ஆரம்பி. புது அவதாரம் எடு… முடங்கிக் கிடகிறத விட முட்டிமோது …மெளனங்கள விட புரட்சியோட பேசு. போராடு . அது பல ஆணி வேர்கள அடியோட அறுத்துப் போடும் .இத நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் என்று மதுமிதா சொன்ன போது பூமகளாகவே தீமகளாக மாறினாள்.
காவல் நிலையத்தை விட்டு அவள் வெளியேறும் போது அவள் உயிரில் புதிய புரட்சியின் பூபாளம் வேர்விட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *