சிறுகதை

புதிய பார்வை | கரூர்.அ.செல்வராஜ்

இரவு 11 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

இரவு உணவுக்குப் பின் டாக்டர் பரிந்துரை செய்திருந்த மாத்திரைகளைக் கூட உண்ண மறந்து விட்டார் சரவணன். அவரது மனதில் அமைதி இல்லை. ஏதோ ஒரு விதமான படபடப்பில் இருந்தார்.

நள்ளிரவு நெருங்கிய நேரத்திலும் கணவனின் அறையில் மின்சார விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட சங்கீதா உடனே அங்கு வந்து பேச ஆரம்பித்தாள்.

‘‘என்னங்க மணி 12 ஆச்சு. இன்னும் தூங்காமல் முழிச்சுக்கிட்டிருக்கீங்க.

வழக்கமா சாப்பிட வேண்டிய உங்க மாத்திரைகளை சாப்பிட்டீங்களா? இல்லையா?’’ என்றாள்.

‘‘மாத்திரைகளைச் சாப்பிட்டேன். ஆனாலும் எனக்குத் தூக்கம் வரலே’’ என்று மனைவியிடம் பொய் சொன்னார் சரவணன்.

கணவர் தன்னிடம் பொய் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட சங்கீதா தன் கணவனின் மன அமைதியைக் கெடுத்த சம்பவம் எது? என்பதை ஒரு நிமிடம் யோசித்து உடனே ஒரு முடிவு கண்டாள்.

‘‘என்னங்க, உங்க மனசு படபடப்பா இருக்கிறதுக்கு காரணத்தைக் கண்டுபிடிச்சுட்டேன். உங்க மனசு நிம்மதி இல்லாமல் போனதற்குக் காரணம் நாம பெத்த பொண்ணு பிரியா தான். அவளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சோம். ஆனா, ஒரு வருஷம் கூட முடியறதுக்குள்ளே புருஷனை விட்டுப் பிரிஞ்சு வந்துட்டா. இன்னும் கொஞ்ச காலத்திலே அவளுக்கு விவாகரத்து கிடைக்கப் போகுது. பொண்ணு வாழ்க்கை வீணாப் போச்சேங்கிற கவலையிலே தான் இப்படித் தூக்கம் வராமல் தவிக்கிறீங்க. விவாகரத்துக் கிடைச்சதும் நல்ல மாப்பிள்ளையைப் பாத்து அவளுக்கு ரெண்டாவது கல்யாணம், பண்ணி வச்சிடலாம். இதுக்காக ரொம்பக் கவலைப்பட்டீங்கன்னா உங்க ரத்தக் கொதிப்பு நிலையை அதிகமாகும். அதனாலே பல பிரச்சனைகள் வரும். நமக்கு வந்திருக்கிற பிரச்சனையை பெரிசா நெனச்சு ரொம்பவும் கவலைப்படாமல் ‘இதுவும் கடந்து போகும்’ என்ற மன உறுதியோடும், நம்பிக்கையாகவும் இருப்போம். கடவுள் நம்மைக் கைவிடப் மாட்டார். நம்புங்க’’ என்று ஊக்கம் தரும் பேச்சைப் பேசினாள் சங்கீதா.

‘‘சங்கீதா, என் கவலைக்கு என்ன காரணம் அப்படீங்கிறதைக் கண்டு பிடிச்சு சொல்லிட்டே. என் கவலைக்கு இன்னொரு காரணமும் இருக்குது. அது என்னன்னா… நம்ம பொண்ணு பிரியா நம்ம வீட்டுக் கார் டிரைவரைக் காதலிக்கிறாள். அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து சுத்தறதையும், சிரிச்சுப் பேசி விளையாடுறதையும் என் கண்ணாலே பார்த்திருக்கிறேன். ஒரு கார் டிரைவரை நம்பி ரெண்டாவது கல்யாணத்தைப் பண்ண முடியுமா?’’ என்று கேள்வி கேட்டு மனைவியிடம் பதிலை எதிர்பார்த்தார் சரவணன்.

கணவனுக்குப் பதில் சொல்லும் விதமதாகப் பேச ஆரம்பித்தாள் சங்கீதா.

‘‘நீ்ங்க கேட்டது நியாயமான கேள்வி தான். நம்ம கார் டிரைவர் ரவிக்குமாரைப் பத்தி எனக்குத் தெரிஞ்ச, என் நலத்திலே அக்கறை உள்ளவங்க சிலரிடம் தீவிரமாக விசாரித்தேன். கார் டிரைவர் ரவிக்குமார் எம்.ஏ., படிச்சிட்டு அதற்குப் பிறகு மேற்படிப்பா எம்.பி.ஏ.,வும் படிச்சிருக்கிறார். நல்ல வேலைக்காக முயற்சி செஞ்சுகிட்டிருக்காரு. போன வாரத்திலே ஒரு இன்டர்வியூவுக்குக் கூட போயிட்டு வந்திருக்காரு. நிச்சயம் அந்தவேலை கிடைச்சிருமாம்.

நம்ம கார் டிரைவர் ரவிக்குமார் இங்க வந்ததுக்குக் காரணம் அவரோட குடும்பப் பொருளாதார நிலைமையாம். கார் டிரைவர் வேலைங்கிறதை ரொம்பவும் சாதாரணப் பார்வையாப் பார்க்காதீங்க. சாலையிலே கார் ஓட்டறது சாதாரணமா? மொத்தக் கவனமும் சிதறாமல் செய்யிற வேலை அது. கொஞ்சம் கண் அசந்தாப் போதும் அப்புறம் சந்தோஷம் ஏன்? சாலையிலே வண்டியை கவனமா ஓட்டீப் பத்திரமா ஊரிலே, வீட்டிலே கொண்டு போய்ச் சேர்க்கிற கார் டிரைவர் ஒருவராலே குடும்ப வாழ்க்கைங்கிற வண்டியை ஓட்ட முடியாதா? வெற்றி பெற முடியாதா? என்றாள் சங்கீதா.

மனைவியின் பேச்சைக் கேட்டு வியந்து போன சரவணன் ,‘‘சங்கீதா, நீயா இப்படிப் பேசறே. ஆச்சரியா இருக்குது. ஒவ்வொரு விஷயத்தையும் செயலையும், ‘புதிய பார்வை’யிலே நீ பார்க்கிறே. நான் பழைய பார்வையிலே பார்க்கிறேன். உன் சிந்தனையிலும் செயலிலும் புதிய மாற்றங்கள் தெரியுது. உனக்கு ஊக்கவுரையாளர் (Motivational Speaker) பட்டமே கொடுக்கலாம். சரி, அதிருக்கட்டும், நம்ம கார் டிரைவர் ரவிக்குமாருக்கே பிரியாவை கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடிவு பண்ணிட்டேன்’’ என்றார்.

‘‘நல்ல முடிவுங்க, பிரியாவுக்கு நல்ல நேரம் சீக்கிரமே ஆரம்பிக்கப் போவுது. அவளைப் பத்திக் கவலைப்பட்டு உங்க மனசையும் உடம்பையும் கெடுத்துக்காமல் நிம்மதியாத் தூங்குங்க. அதுக்கு முன்னாலே நீங்க சாப்பிட மறந்த மாத்திரைகளையும் மறக்காமல் சாப்பிடுங்க. ‘குட் நைட்’. என்று சொல்லி விட்டு கணவனின் அறையிலிருந்து வெளியேறி மகள் பிரியாவின் அறைக்கு வந்தாள் சங்கீதா. அடுத்த நாள் காலை பொழுது அனைவருக்கும் ஆனந்தம் தந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *