சிறுகதை

புதிய பாதை | கரூர் அ. செல்வராஜ்

அம்மா தயார் செய்து தந்த இடியாப்பங்களைக் கவனமாகக் கையில் எடுத்து எவர்சில்வர் டிரம்மில் வைத்தான் ரவிசங்கர்.

அப்போது அவனின் அம்மா சாந்தி … ‘‘ரவி! காலையிலும் மாலையிலும் இடியாப்பத்தை எடுத்துகிட்டு போயி பக்கத்து தெருக்களிலே நம்ம வாடிக்கையாளர்களிடம் வித்துகிட்டே வர்றே. இன்னும் எத்தனை வருஷத்துக்குத்தான் நீயும் நானும் கஷ்டப்படப் போறோமோ?‘‘ என்றாள் வருத்தம் கலந்த குரலில்.

அம்மாவின் வேதனைக் குரலைக் கேட்டு சற்றே கவலையடைந்தான் ரவிசங்கர். கவலையை வெளியே காட்டிக் கொள்ளாமல் ,

‘‘அம்மா! நீங்கள; கவலைப்படாதீங்க. அப்பா வேலைக்குப் போக முடியாமல் படுத்த படுக்கையிலே இருக்காரு. அதனாலே நீங்க கஷ்டப்படறீங்க. எனக்கு ஒரு வேலை கிடைச்சுட்டா போதும். உங்களை உட்கார வைத்து சோறு போட்டு உங்களையும் அப்பாவையும் உயிருள்ள வரைக்கும் காப்பாத்துவேன். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க’’ என்று ஆறுதல் சொன்னான் ரவிசங்கர்.

அன்பு மகனின் ஆறுதலான வார்த்தைகளால் சந்தோஷ நிலைக்கு மாறிய சாந்தி

‘‘ரவி! சரிப்பா, நேரம் ஆச்சு; நீ கிளம்பு. கொஞ்சம் லேட்டாப் போனாலே நம்ம வாடிக்கையாளர்கள் உன்னைப் பாக்காமே தவிச்சுப் போயிடுவாங்க. சிலரு செல்லமா கோபமும் படுவாங்க. கிளம்பு ரவி’’ என்று சொல்லி மகனை வழியனுப்பி வைத்தாள் சாந்தி.

இடியாப்பம் வைத்திருக்கும் எவர்சில்வர் டிரம்மை தனது மொபெட் வண்டியில் வைத்துக் கட்டிக்கொண்டு கிளம்பினான். வண்டியை மெதுவாக ஓட்டியதோடு தனது வழக்கமான விற்பனைக் குரலில் ‘‘இடியாப்பம், இடியாப்பம்’’ என்று சொல்லிக் கொண்டு சென்றான்.

வாடிக்கயைாளரில் ஒருவரான வயது முதிர்ந்த லட்சுமி அம்மாள் வீட்டின் முன்னே சென்று வண்டியை நிறுத்தினான். பாத்திரத்திலிருந்து 6 இடியாப்பங்களை எடுத்துச் சிறிய பாக்கு மட்டைத் தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றான் ரவிசங்கர்.

இடியாப்பம் கொண்டு வந்த ரவிசங்கரிடம் அதை வாங்கிக் கொண்டு அதற்குரிய பணத்தையும் கொடுத்து விட்டு

‘தம்பி ரவி! தை பிறந்தால் வழி பிறக்கும்ன்னு பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க. உனக்கு வேலை இல்லாததைப் பத்தி என் பேரன் சுரேஷ்கிட்டே சொல்லி வச்சிருந்தேன். அவன் ஒரு தனியார் பேங்குலே மேனேஜரா வேலை செய்யறான். அவன் வேலை செய்யற பேங்குல கிளார்க் வேலைக்கு ஆள் தேவையாம். ஏதாவது ஒரு வேலை வேணும்னு நீ எங்கிட்ட அடிக்கடி சொல்லிகிட்டே இருந்தே. அதை ஞாபகத்திலே வச்சிருந்தேன். அது தான் என் பேரன்கிட்டே பேசினேன். உன்னுடைய நல்ல நேரம் இந்தப் புது வருஷத்திலே உனக்கு ஒரு வேலை தேடி வந்திரும்னு சுரேஷ் சொன்னான். அந்த வேலையிலே சேர்ந்துக்கிறியா…?‘‘ என்று கேட்டாள் லட்சுமி அம்மா.

லட்சுமி அம்மாளின் பேச்சைக் கேட்டு சந்தோஷம் அடைந்த ரவிசங்கர் தனது பேச்சில் உற்சாகம் பொங்கி வழிந்த நிலையில் ‘லட்சுமி அம்மா! என் வீட்டு நிலைமையை நல்லாத் தெரிஞ்சவங்க நீங்க மட்டும் தான். என்னை உங்க பேரன் ஸ்தானத்தில் வச்சுப் பாத்தீங்க. எனக்காக உங்க பேரன்கிட்டே பேசி இந்த வேலைக்கு என்னை சிபாரிசு செஞ்சிருக்கீங்க. உங்க உதவியை என் வாழ்நாள் முழுசும் மறக்கமாட்டேன்’ என்று சொல்லிக் கையெடுத்துக் கும்பிட்டு கண்ணீர் வழி நன்றி சொன்னான்.

ரவிசங்கரின் நன்றியை ஏற்றுக்கொண்ட லட்சுமி அம்மாள் ‘தம்பி ரவிசங்கர்! என் வாழ்நாளிலே பலருக்கும் பல வழிகளில் உதவி செஞ்சிருக்கேன். அதையெல்லாம் பார்க்கும்போது இந்த உதவி பெரிசு இல்லே. உன்னுடைய கடந்த கால வாழ்க்கைப் பாதையிலே கஷ்டங்கள் அதிகம் இருந்துச்சு. கஷ்டங்களைக் கொடுத்த கடவுள் உன்னைக் கைவிடலே. இந்தப் புது வருஷத்திலே ஒரு புதிய பாதையை உனக்குக் கடவுள் காட்டியிருக்காரு. இன்னிக்கு ராத்திரி 9 மணிக்கு என் பேரனை வீட்டிலே சந்திச்சுப் பேச வாப்பா ரவி. இப்ப நீ கிளம்பு’ என்று சொன்னாள் லட்சுமி அம்மாள்.

அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றான் ரவிசங்கர் புதிய புத்துணர்ச்சியுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *