நாடும் நடப்பும்

புதிய நம்பிக்கை தரும் பொருளாதாரம்: 75,000 நோக்கி பங்கு குறியீடு


ஆர். முத்துக்குமார்


2021 முடிவுக்கு வரும் வாரத்தில் நாம் திரும்பிப் பார்க்கும் போது இவ்வாண்டு துவக்கத்தில் பங்கு மார்க்கெட் 50,000 புள்ளிகள் இலக்கைத் தொடும் என்று எதிர்பார்த்தது நினைவுக்கு வருகிறது. அக்டோபர் மாதத்தில் 60,000 புள்ளிகள் என்ற உச்சத்தையும் தாண்டியது!

ஆனால் தற்போது 57,000 புள்ளிகள் என்ற அளவில் நிலை கொண்டிருக்கிறது. இங்கிருந்து சற்றே கூடினாலும் 70,000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டுவது மிக எளிதாகும்.

ஆனால் பங்கு மார்க்கெட்டில் இருக்கும் மிகப்பெரிய அச்சம் ஒமிக்ரான்! இந்தியாவில் அதன் வீரியம் துவக்க நிலையில் தான் இருக்கிறது. ஆனால் சூறாவளிப் புயலாய் சீறி நாட்டை தாக்கினால் அடுத்த 30 நாட்களுக்குப் பிறகு நாட்டில் அது ஏற்படுத்தும் நாசம் பற்றிய அச்சத்தால் பொருளாதார குறியீடுகள் நடுங்கிக் கொண்டிருப்பது புரிகிறது.

அதனால் தான் 60,000 புள்ளிகள் என்ற குறியீட்டை தாண்டிய சில நாட்களில் மீண்டும் சரிவு காண ஆரம்பித்து தற்போது 57,000 என்ற இலக்கில் இருக்கிறது.

பொருளாதார குறியீடு இப்படி குறைந்திருப்பதால் நாட்டின் வளர்ச்சி குறைந்து விடுமா? என்ற அச்ச கேள்விக்குப் பதில் சர்வதேச நிதியம் அதாவது IMF வெளியிட்டுள்ள கணிப்பை தெரிந்து கொள்வதில் இருக்கிறது.

நமது உற்பத்தி வளர்ச்சி 9.5% வளர்ச்சியை காணும் என்று அடுத்த நிதியாண்டில் 8.5% ஆக இருக்கும் என்று சர்வதேச நிதியம் உறுதியாக கூறியுள்ளது.

கொரோனா பெரும் தொற்றின் பிடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா பொருளாதாரத்தை நிலை நிறுத்த டாலரின் நிலையை ஸ்திரமாக வைத்திருக்கவே உருவான சர்வதேச நிதியம் இந்திய பொருளாதாரம் ஸ்திரமாகவும், வளர்ச்சியையும் காணும் என நம்புவது நல்ல செய்தியாகும்.

உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியை பெறுவதிலும் பெருவாரியான மக்களுக்கு கொண்டு செல்வதில் சிக்கல்களையும் கண்டு வரும் நிலையில் இந்தியர்களில் 100 கோடி பேருக்கும் மேற்பட்டோர் முதல் 2 தவணை தடுப்பூசியை பெற்று விட்டது ஆச்சரியம், ஆனால் உண்மை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

அமெரிக்காவில் 35 கோடி பேரில் 22 கோடி பேர் மட்டுமே தடுப்பூசியை பெற முன் வந்துள்ளனர். அதாவது அந்நாட்டின் மீதி கால்வாசிப் பேர் தடுப்பூசியை வேண்டாம்… என்று அறிவித்து விட்டனர். ஜனநாயக நாட்டில் அப்படி ஒர் நிலை நிலவுவது மக்களின் உரிமைக்கு மதிப்பு தருவதாக இருக்கிறது.

ஆனால் சாமானியனுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்றாலும் தடுப்பூசியை செலுத்தி நாட்டின் பெருவாரியான ஜனத்தொகையை சென்றடைய செய்யா விட்டால், தொற்று கட்டுப்படாமல் மீண்டும் சர்வநாச சக்தியுடன் தாக்கி நாட்டை முழு ஊரடங்கை அறிவிக்க வைத்து விடும் அல்லவா?

ஆனால் நம் நாட்டில் மத்திய அரசும் மாநில அரசுகளும் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளால் பெருவாரியான ஜனத்தொகை தடுப்பூசியை பெற்று விட்டது.

ஆகவே அடுத்த கொரோனா தொற்று பரவல் நம் நாட்டில் இருக்குமா? அப்படியே இருந்தால் அதன் வீரியம் எப்படி இருக்கும் என்பதற்கு ஓரளவு நம்பிக்கையுடன் நாம் பயப்படத் தேவையில்லை என்று நம்பிக்கை பெறுகிறோம்.

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் உலக பொருளாதாரங்கள் இந்திய பொருளாதாரம் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

சென்ற சில மாதங்களில் நமது நிதி கையிருப்பில் 75% டாலர் என்று மாறி விட்டது! அதாவது நமது வருவாய் அந்நிய செலாவணி வருகையால் வளர்ச்சிகள் கண்டு வருகிறது.

ஆகவே நமது அடுத்த பட்ஜெட் பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்படும் போது அது உற்பத்தித் துறைக்கு மேலும் சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மருத்துவ சேவைகள் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டு வருகிறது. சுற்றுலா, சினிமா போன்ற கேளிக்கை சமாச்சாரங்களும் மெல்ல சீரான வருவாய் ஈட்ட துவங்கி வருகிறது.

இவையெல்லாம் பங்கு வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் ஆகும். சென்ற ஆண்டு இறுதியில் 2021 இல் பங்கு மார்க்கெட் 50,000 புள்ளிகளை தாண்டும் என்று ஆரூடம் கூறிய நிபுணர்கள் 2022 இல் 65,000 புள்ளிகளை தாண்டுவதுடன் 70,000 என்ற உச்சத்தையும் தொடும் என்று நம்புகிறார்கள்.

அது சாத்தியமா? நம்பி பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்யலாமா? இதே கேள்விகளை கொண்ட பல நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

அவர்களின் நம்பிக்கை 2021ல் பல புதிய பங்கு வெளியீடுகள் பெற்ற வரவேற்புகளினால் பெற்ற உந்துதல் ஆகும்.

2021ல் மியூச்சுவல் பண்டுகள் முதலீட்டாளர்களின் முழு நம்பிக்கையை பெற்ற ஆண்டு என்பது உண்மையாகும். கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் கோடி முதலீடுகள் புதிய மியூட்சுவல் பண்டுகளின் பயனாக பங்குச் சந்தைகள் வந்துள்ளது.

கடன் வட்டி விகிதம் ஓரளவு குறைவாகவே இருப்பதுடன் அதிக மாற்றமின்றி நிரந்தர தன்மையுடன் இருப்பதால் கடனை திரும்ப செலுத்துபவர்களுக்கு நிலையான மாதாந்திர கடன் தவணை தொகையைாகவே இருக்கிறது.

கடந்த 3 மாதங்களில் வெளி வந்த மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்தவர்கள் பெருவாரியாக வெளியிடும் கருத்து வங்கி வைப்பு நிதியில் முதலீடு செய்தால் கிடைக்கும் வட்டி வருவாயை விட அதிகமாக மாதாமாதம் பெற முடியாவிட்டாலும் ஆண்டு வருவாய் பல மடங்கு அதிகமாகவே இருப்பதால் மியூட்சுவல் பண்டுகளில் முதலீடு செய்துள்ளோம் என்று கூறி வருகிறார்கள்.

ஆக 2022 முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் புத்தாண்டாய் மலர இருக்கிறது.

பங்கு மார்க்கெட்டில் இருந்த சில ‘ரிஸ்க்’ சமாச்சாரங்கள் பற்றிய சிந்தனை உள்ளவர்கள் பங்கு முதலீடுகளை விட மியூச்சுவல் பண்டுகளில் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *