பாராளுமன்ற தேர்தல் தேதி நாளை மதியம் அறிவிப்பு
புதுடெல்லி, மார்ச் 15–
இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர்சிங் சாந்து ஆகியோர் இன்று பதவியேற்றனர். இதையடுத்து பாராளுமன்ற தேர்தல் தேதி நாளை மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தேர்தல் கமிஷனராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் கமிஷனரான அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மட்டுமே தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்தார். இதையடுத்து இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை பிரதமர் தலைமையிலான குழு நேற்று கூடி தேர்வு செய்தது. இதில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து ஆகியோர் புதிய தேர்தல் கமிஷனர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர்சிங் சாந்து இன்று காலை பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக மூவரும் ஆலோசனை நடத்தினார்கள். அவர்கள் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக இறுதி கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து பாராளுமன்ற தேர்தல் தேதி நாளை மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது.