செய்திகள்

புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி, ஜூலை 22–

நிலத்தில் இருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:–

ஒடிசா கடற்கரைப் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இருந்து நேற்று நண்பகல் 12.45 மணிக்கு ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

கட்டளை பிறப்பிப்பு, கட்டுப்பாட்டு அமைப்பு, தொலைத் தொடர்பு அமைப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் நிலப்பரப்பில் இருந்து இந்த ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது.

பரிசோதனைக்குப் பிறகு கட்டுப்பாட்டு அமைப்பு அளித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில், இந்த ஏவுகணை எந்தவித குறைபாடும் இன்றி இயங்கியது உறுதிசெய்யப்பட்டது.

இந்த ஏவுகணையை இந்திய விமானப் படையில் சேர்த்ததும், அதன் வலிமை பல மடங்கு அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆகாஷ் ஏவுகணை(ஆகாஷ்-என்.ஜி.), நிலத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவு வரை விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது. இந்த ஏவுகணையை 2.5 மாக் வேகம் வரை செலுத்த முடியும். பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பிற நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. வடிவமைத்துள்ளது.

டி.ஆர்.டி.ஓ அமைப்புக்கும், தயாரிப்பில் உதவிகரமாக இருந்த பிற நிறுவனங்களுக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். இந்த வெற்றிகர சோதனைக்காக, இந்த குழுவினருக்கு டி.ஆர்.டி.ஓ. தலைவர் ஜி.சதீஷ் ரெட்டியும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பீரங்கியை தாக்கி

அழிக்கும் ஏவுகணை

எதிரி நாட்டின் பீரங்கியை தாக்கி அழிக்கவல்ல, முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையும் வெற்றிகரமாக நேற்று சோதித்துப் பார்க்கப்பட்டது.

இதுகுறித்து ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

எதிரி நாட்டு பீரங்கிகளை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணைகளை, மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணிகள் சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. அதன்படி, இலகு ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன. இந்த ஏவுகணைகளானது தாமாகவே சென்று பீரங்கிகளை அழிக்கக்கூடியவை ஆகும்.

இந்நிலையில், இந்த ஏவுகணை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, குறிப்பிட்ட தொலைவில் வைக்கப்பட்டிருந்த மாதிரி பீரங்கியை, இந்த ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

இதன் மூலம் குறைந்த தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் சோதனை வெற்றிகரமாக முடிந்தது. அதிகபட்ச தூரம் செல்லும் சோதனையை, இந்த ஏவுகணை ஏற்கனவே வெற்றிகரமாக முடித்தது. இந்த ஏவுகணையில் அதிநவீன மிகச்சிறிய அகச்சிவப்பு இமேஜிங் கருவி மற்றும் மேம்பட்ட ஏவியானிக்ஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சோதனை மூலம், கையில் எடுத்துச் செல்லக்கூடிய 3ம் தலைமுறை ஏவுகணையை உருவாக்கும் திட்டம் நிறைவேறியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *