செய்திகள்

புதிய ‘டெல்டா பிளஸ்’ வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

புதுடெல்லி, ஜூன்.15-

இந்தியாவில் 2வது அலை கொரோனா பரவலுக்கு காரணமாக உள்ள ‘டெல்டா’ வகை வைரஸ், தற்போது மேலும் உருமாறி ‘டெல்டா பிளஸ்’ ஆக தோன்றியுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் இந்த வைரஸ் பல விதமாக உருமாற்றம் அடைந்து சில நாடுகளில் 2வது, 3வது அலைகளாக உருவெடுத்தது. இந்தியாவிலும் டெல்டா வகை சார்ந்த சார்ஸ்–கொரோனா வைரஸ் 2வது அலையாக உருவெடுத்து, அதிவேகமாக பரவியது.

இதனால், பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்தது. தற்போது ஓரளவு பாதிப்புகள் குறைந்துவரும் சூழலில், டெல்டா வகை வைரஸ், மேலும் உருமாறி ‛டெல்டா பிளஸ்’ ஆக தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால் ஆறுதல் அளிக்கும் வகையில் இந்த வகை, இந்தியாவில் தற்போது குறைவாகவே காணப்படுவதால் உடனடி கவலைக்கு அவசியம் இல்லை என்றும் கூறுகின்றனர்.

தற்போதைய புதிய மாற்றம், சார்ஸ்–கொரோனா வைரஸ் 2-ன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அது மனித செல்களில் நுழையவும், பாதிப்பை ஏற்படுத்தவும் இந்த புதுவகை வைரசுக்கு உதவுவதாகவும் டெல்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணை உயிரியல் நிறுவன விஞ்ஞானி வினோத் ஸ்காரியா கூறுகிறார்.

இப்போதைக்கு புதிதாக மாற்றம் அடைந்துள்ள கொரோனா வகை குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை என்றாலும், அதைத்தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியம் என்பதே விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *