செய்திகள்

புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு 25–ந்தேதி பதவி ஏற்கிறார்

புதுடெல்லி, ஜூலை.23-

புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு உள்ள திரவுபதி முர்முவின் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் டெல்லியில் தொடங்கியுள்ளன.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைவதை தொடர்ந்து, நாட்டின் 15-வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18-ந்தேதி நடந்தது.

இதில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னரும், ஒடிசாவை சேர்ந்த பழங்குடியின தலைவருமான திரவுபதி முர்மு வெற்றி பெற்றார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில் திரவுபதி முர்முவுக்கு 6,76,803 வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு 3,80,177 வாக்குகளும் கிடைத்தன.

இதன் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி, 2-வது பெண் ஜனாதிபதி, மிகவும் இளையவர் என பல்வேறு பெருமைகள் திரவுபதி முர்முவுக்கு கிடைத்து உள்ளன.

புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள திரவுபதி முர்மு வருகிற 25-ந்தேதி காலையில் பதவியேற்கிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

பதவி ஏற்பு விழாவிற்காக நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த விழாவுக்காகவும், அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவும் வசதியாக 25–ந்தேதி அன்று நாடாளுமன்ற இரு அவைகளும் காலை 11 மணிக்கு பதிலாக பிற்பகல் 2 மணிக்கு கூடுகின்றன.

மேலும் இந்த பதவியேற்பு விழாவை சிறப்பாக நடத்தி முடிப்பதற்காக டெல்லியில் குறிப்பிட்ட சில அரசு கட்டிடங்களை பிற்பகல் 2 மணி வரை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

அத்துடன் பதவியேற்பு விழா முடியும் வரை புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இதைத்தவிர மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, திரவுபதி முர்முவின் பதவியேற்பு விழாவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.