சிறுகதை

புதிய சொந்தங்கள் – எம்.பாலகிருஷ்ணன்

அம்மாவோட இருதய ஆப்ரேசனுக்காக ரெண்டு லட்சத்துக்கு நான் எங்க போவேன்” மனம்கலங்கி கண்ணிர் விட்டான் செழியன்.

அவனும் பல இடங்களில் கேட்டுபார்த்தான். ஒர் இடத்திலும் கூட கிடைக்கவில்லை.

செழியனுடைய அம்மாவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அவசரத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்த்து விட்டான்.

பரிசோதித்த டாக்டர்கள் இதயத்தில் அடைப்பு உள்ளது. அதைச் சரி செய்ய உடனடியாக ஆபரேசன் செய்ய வேண்டும் அதற்கு இரண்டு இலட்சம் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள் .

மருத்துவர்கள் சொன்னதிலிருந்து தடுமாறி போய்விட்டான். அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை!

செழியனுக்கு அம்மாவின் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் வைத்திருந்தான். அவனுடைய அப்பா செழியன் சிறுவயதில் படித்துக் கொண்டிருக்கும் போதே நோய்வாய்பட்டு அகால மரணம் மடைந்து விட்டார். செழியனுடன் சேர்த்து அவனது தம்பியையும் படாதபாடுபட்டு தெருத் தெருவாக பூவியாபாரம் செய்து வளர்த்து ஆளாக்கினாள் அவனுடைய அம்மா.

அவள் எல்லோருடனும் அன்பாக பழகுவாள். தெருவில் குடியிருப்பவர்கள் தேடிவந்து பூ வாங்குவார்கள்; அவ்வளவு நற்பெயருடன் இருந்தவள். இடையில் நேரம் கிடைக்கும் போது மாவு வியாபாரம் செய்வாள்.

செழியனை அவளால் தொடர்ந்து படிக்க வைக்க முடியவில்லை அவனை பள்ளிக்கு இறுதி வகுப்பு வரை மட்டும் படிக்கவைத்தாள் அவனும் இருபது வயது வரை அம்மாவுக்கு துணையாக இருந்தவன் இடையில் சின்ன சின்ன வேலைக்குச் சென்று வந்தவனை இருபத்தைந்து வயது ஆனவுடன் அவனுடைய அம்மா தெரிந்தவர்கள் மூலம் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்த்துவிட்டாள். செழியனும் ஒழுங்கான முறையில் வேலைக்குச் சென்று அவனுடைய தம்பியை ஒரு கல்லூரியில் முதல் வருசம் படிப்பில் சேர்த்து விட்டான். இப்போது செழியனுக்கு முப்பது வயதாகிவிட்டது. இன்னும் திருமணம் ஆகவில்லை.

அவனுடைய அம்மா ஆப்ரேசனுக்கு பணத்துக்கு முயற்சி செய்து பார்த்து விட்டான். ஆயிரம் ரெண்டாயிரம்ன்னா பரவாயில்லை. இரண்டு லட்சம் கேட்கிறீயே , நாங்கள் எங்கே போறது என்ற வார்த்தைதாம் பதிலாக வந்தன.

சரி வட்டிக்கு பணம் வாங்கலாமென்று நினைத்து அங்கே போனால் அவ்வளவு பணம் எங்ககிட்டஇல்ல என்று கூறிவிட்டனர்.

அவன் வேலை பார்க்கும் கம்பெனியிலும் இதே பதில் தான் கூறினர் வீட்டின் பேரில் கடனாகவும் கேட்க முடியாது ஏனென்றால் அது வாடகை வீடாச்சே! மருத்துவகாப்பீடு அட்டையும் அவனிடம் இல்லை என்ன செய்வது என்று புரியாமல் நெருப்பில் பட்ட புழுவாக துடித்தான்.

சொந்த பந்தம் என்று சொல்லிக்கொள்ள அவ்வளவாக யாரும் இல்லை உண்மையான நெருக்கமான நண்பர்களும் அவனுக்கு இல்லை. இன்னும் ஒருவாரத்துக்குள்ள ஆப்ரேசன் பண்ணனும் ரெண்டு லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று மருத்துவர்கள் கூறிய வார்த்தைகள் அவ்வப்போது நிழலாடின.

இன்னும் ஆபரேசன் செய்வதற்கு ஒரேநாள் தான் உள்ளது!

அம்மாவை நினைத்து வருத்தப்படுவதா? பணம் கிடைக்காததை எண்ணி வருத்தப்படுவதா? அவனுக்குள்ளே மனதில் போராட்டம் நடந்தது செழியனுக்கு திடீரென்று மின்னல் மாதிரி ஒரு ஞாபகம் வந்தது. வெளியூரில் இருக்கும் அவனுடைய பெரியப்பா ஞாபகம் தான். அப்பாவின் உடன்பிறந்த சகோதர் தில்லைநாயகம்.

அவர் கொஞ்சம் வசதியானவர். ஆடு மாடு நிலம் வைத்துள்ளவர் சொந்த விவசாயம் அவர் குடியிருக்கும் ஊரில் பெரும் புள்ளியாக இருப்பவர்.

செழியன் லேசான சந்தோசத்துடன் அடஅட நம்ம பெரியப்பா இருக்காரே மறந்தே போயிட்டோம்! அம்மாவின் ஆப்ரேசனுக்கு பெரியப்பா நிச்சயம் உதவி செய்வார் கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு ஏன் அலைய வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு வேகமாக தன் வீட்டிற்கு சென்றான் வீட்டிலிருந்து தம்பியை அழைத்து டேய் தம்பி, நான் பெரியப்பா ஊருக்கு போயிட்டு வந்திடுறேன் ஆஸ்பத்திரியில் இருக்கும் அம்மாவை கவனமாக பார்த்துக்கோ ஆப்பரேசனுக்கு பணத்துடன் வருகிறேன் என்று கூறிவிட்டு பெரியப்பாவின் ஊருக்கு செல்ல பஸ் நிலையம் சென்றான். பஸ்ஸில் ஏறி சந்தோச கனவுடன் தன் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டான்.

இரண்டு மணிநேரம் கழித்து பெரியப்பாவின் ஊரில் இறங்கினான். இறங்கியவன் கவலை தோய்ந்த முகத்துடன் நெஞ்சில் படபடப்புடன் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தான்.

அந்த ஊர் சிறிய கிராமம் விவசாய நிலங்கள் பசுமையான காட்சியளித்தன சின்ன சின்ன ஓட்டு வீடுகளும் கல் கான்ங்கிரீட் வீடுகளும் நிறைந்திருந்தன அவனுடைய பெரியப்பா வீடு சற்று பெரிதாகவே காணப்பட்டது முழு நம்பிக்கையுடன் பெரியப்பா தில்லைநாயகத்தின் வீட்டை செழியன் அடைந்தான் வந்தவனை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டாள் அவனது பெரியம்மா. இந்த நேரத்தில் ஏன் இவன்வர்றான் ஒருவேளை பண உதவி கேட்டு வர்றனோ மனதில் அவள் நினைத்து விட்டு என்னங்க யாரு வந்திருக்கா பாருங்க நம்ம செழியன் மாதிரி இருக்கு நாற்காலியில் வீட்டு வெளியில் மாலை பத்திரிக்கையை படித்துக் கொண்டிருந்த பெரியப்பா தில்லைநாயகம் மனைவியின் ஆர்ப்பாட்டமான குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்தார். எதிரில் செழியன் நின்றிருப்பதை பார்த்து அடஅடே வாப்பா செழியா! என்ன திடீரென்று வந்திருக்க? கையில் வைத்திருந்த நாளிதழை கீழே வைத்து மூக்கு கண்ணாடியை கழற்றியவாறே கேட்டார்.

உங்களைப் பார்த்துட்டு போகலாமுன்னு வந்தேன் பெரியப்பா என்று கூறிக் கொண்டே பக்கத்திலிருந்த பெஞ்சில் உட்கார்ந்தான் கண்களில் வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு.

என்னப்பா குரலே சரியில்ல! ஏதாவது பிரச்சனையா என்று அவர் கேட்டார்.

ஆமாம் பெரியப்பா அம்மாவுக்கு உடம்புக்கு முடியல உங்க அம்மாவுக்கு என்ன என்று தில்லைநாயகம் கேட்டுவிட்டு மனைவி பக்கம் திரும்பி பார்த்து அடியே பையனுக்கு குடிக்கத் தண்ணீர் கொண்டு வா என்றவர் மறுபடியும் செழியனியடம் அம்மாவுக்கு என்ன பிரச்சனை? எனக்கேட்டார்

நெஞ்சுவலி பெரியப்பா அம்மாவுக்கு ஆபரேசன் பண்ண ரெண்டு லட்சம் ஆஸ்பத்திரியில் கேட்குறாங்க.

எந்த ஆஸ்பத்திரியில் சேர்த்த? வியப்புடன் கேட்டார்

பிரைவேட் ஆஸ்பத்திரியில்

முழுமையாக புரிந்து கொண்ட தில்லைநாயகம் சரிப்பா நீ பிரைவேட் ஆஸ்பத்திரியில் ஏன் சேர்த்த ஏகப்பட்ட செலவாகுமே.

அவசரத்தில் சேர்த்துவிட்டேன் பெரியப்பா

செழியன் பேசியதை வீட்டினுள் இருந்து கேட்ட அவளுடைய பெரியம்மா வெளியே வந்து

ஏன்டா செழியா அம்மாவை கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கலாமில்ல; பணம் பிரச்சனை இல்லாம வைத்தியம் பார்க்கலாம்; நீ இருக்கப்பட்டவன் போல பிரைவேட் ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டே.

பெரியம்மா அந்த நேரத்தில் கை கால் ஓடல. அம்மாவைக் குணம் படுத்த அவசரத்தில் சேர்த்திட்டேன். நெஞ்சுல அடைப்பு இருக்காம். அதுக்கு ஆபரேஷன் பண்ண ரெண்டு லட்சம் கேட்குறாங்க நீங்களும் பெரியப்பாவும் இந்த நேரத்தில் உதவி பண்ணினீங்க. நான் மாசம் மாசம் கொஞ்ச கொஞ்சமாக பணத்தை கொடுத்திடுவேன் பெரியம்மா என்று கெஞ்சி கேட்டான் செழியன் .

கேட்டவுடன் அவளுக்கு சுளீர் என்று கோபம் வந்தது இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு

சரிப்பா அதுக்கு பணத்துக்கு நாங்க எங்கே போவது? சும்மாவா ரெண்டு லட்சமாச்சே! நாங்களே ரொம்ப கஷ்டப்படுறோம் விவசாயம் நடக்கல விளைச்சல் இல்லை ஆடு மாடுகளுக்கு இரை கூட போட முடியலப்பா நீ பேசம உங்க அம்மாவ கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சேத்திடு. அதுதான் ஒரே வழி இவ்வளவு வார்த்தைகள் மனைவியைப் பேசவிட்டு தில்லைநாயகம் மௌனமாகவே இருந்தார்.

செழியன் அவனுடைய பெரியப்பாவை பார்த்து பெரியப்பா நீங்களாவது பெரியம்மாவுக்கு எடுத்துச் சொல்லுங்கப்பா என்று மன்றாடினான்.

உங்க பெரியம்மா சொல்றதுதான் எனக்கும் சரின்னு படுது செழியா. நீ உங்க அம்மாவை கவர்மெண்ட் ஆஸ்பத்திரி யிலேயே சேத்திடு. நல்லா பாப்பாங்க என்று கூறிக்கொண்டு மறுபடியும் பத்திரிகை எடுத்து படிக்கலானார்.

செழியனுக்கு ஒரே அதிர்ச்சி; தில்லைநாயகம் பெரியப்பா இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை.

மறுபடியும் செழியன் பெரியப்பா உங்கள விட்ட எனக்கு யாரையும் தெரியாது; ஏதாவது முயற்சி செஞ்சி உதவி செய்யுங்க என்று பெரியப்பாவின் கரங்களைப் பற்றிக் கொண்டு கண்ணீருடன் கேட்டான்.

ஏப்பா சூழ்நிலையை புரிஞ்சுக்காம நான் முன்ன மாதிரி இல்ல வறுமையில் வாடிட்டு இருக்கேன். விவசாய தொழில சரியா நடக்கல. என்னால ஒன்னும் செய்யமுடியலப்பா. பெரியப்பா சொல்றேன்னு வருத்தப்படாதே. உங்க அம்மாவை சீக்கிரமா போயி கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போ. திட்டவட்டமாக பேசி முடித்தார் தில்லைநாயகம்.

மலை போல நம்பி வந்தேன். உங்கள நீங்களே இப்படி சொல்லலாம பெரியப்பா நான்யாருகிட்ட போயி பணம் கேட்பேன்.

செழியா நேரத்தை வீணாக்காதே. நான் சொன்ன மாதிரி உடனே செய் ; இருட்டாகபோது; கிளம்பு ஊருக்கு.

இதற்கு மேல பெரியப்பாவிடம் பேசி பயனில்லை என்று புரிந்து கொண்டு செழியன் பெஞ்சிலிருந்து எழுந்தான். அந்த நேரம் பார்த்து ஒரு நடுத்தர வயதுக்காரர் தில்லைநாயகம் வீட்டை நோக்கி வேகமாக கையில் பையுடன் வந்து தில்லைநாயகம் அய்யா உங்ககிட்ட வாங்கின ரெண்டு லட்சத்துக்கு வட்டியோட கொண்டு வந்திருக்கிறேன் இந்தாங்கய்யா என்று பணம் வைத்திருந்த பையை தில்லைநாயகத்திடம் நீட்ட

சற்று எதிர்பார்க்காத தில்லைநாயகம் பணத்துடன் வந்த வரையும் பக்கத்தில் நின்றிருந்த செழியனையும் அதிர்ச்சியுடன் பார்த்தார். நல்லா மாட்டிகிட்டேனே.

பணத்த கொண்டுவந்தவன் செழியன் இருக்கிறப்ப பணம் கொண்டுவரணும்? தனியாய் இருக்கும்போது பணத்தை கொடுக்காம இப்படி வெட்டவெளியில் மூட்டையை அவுத்துட்டானே; பணத்தை பார்த்துச் செழியன் கேட்டு விடுவானோ; குற்றவாளி போல் கூனிக்குறுகி வெட்கத்துடன் தடுமாறிப் போனார் தில்லைநாயகம்; வெடவெடத்துப்போனார்.

தில்லைநாயகத்தை பார்த்து செழியன் பெரியப்பா உங்க பணத்தை வாங்கிக்குங்க. நான் ஒன்னும் மானம் கெட்டு உங்ககிட்ட எங்க அம்மாவை காப்பாத்த பணம் கேட்க மாட்டேன். உங்க உண்மையான வேசம் தெரிஞ்சிருச்சு என்று நெத்தியடியாக பேசிவிட்டு இந்த இடத்தை விட்டு வேகமாக நடந்தான்

சே! இப்படியும் பெரியப்பா மாதிரி பண மிருகங்கள் இருக்கிறாங்க. நம்ம பெரியப்பா ஒரு பணப்பேயின்னு இப்பதானே புரியுது. சொந்த பந்தங்கள் காட்டிலும் காசு பணம்னு வாழ்றாரு.

இவரைப் பார்க்க வந்ததே பெரிய தப்பு என்ன மனிசஜென்மம் என்று புலம்பிக் கொண்டே நடந்து பஸ் நிலையம் வந்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து அவனுடைய அம்மாவை பற்றிய கவலைகளுடன் ஊர் வந்து சேர்ந்தான் செழியன்.

வீட்டில் தன் தம்பியிடம் பெரியப்பா வீட்டில் நடந்ததையெல்லாம் கூறினான். அவனும் வருத்தப்பட்டான் நாளைக்கு அம்மாவின் ஆபரேசனுக்கு பணத்திற்கு என்ன செய்வது ? ஆபரேசன் நடக்குமா ? இல்ல ஆஸ்பத்திரியில்ருந்து அம்மாவை வெளியேற்றி விடுவார்களா? இப்படிப் பல கேள்விச் சுமையுடன் படுக்கச் சென்றான்.

மறுநாள் செழியனுக்கு திக் திக் என்று நெஞ்சில் அடித்தது. விடியும் முன்பே ஆஸ்பத்திரி நோக்கி விரைவாக சென்றான்.

ஆஸ்பத்திரியை அடைந்தவுடன் உள்ளே போனவன். வரவேற்பறையில் இருந்த அலுவலக பெண்ணிடம் அம்மா எப்படி இருக்காங்க? ஆப்ரேசனுக்கு இரண்டு லட்சத்துக்கு எவ்வளவோ முயற்சி செஞ்சி பார்த்தேன் பணம் கிடைக்கல மேடம்

நீங்க ஆபரேசனுக்கு பணம் கட்ட வேண்டாம் ;

புரியாமல் விழித்தான் செழியன்

என்ன மேடம் சொல்றீங்க?

ஏரியாவில் குடியிருப்போர் நலச்சங்கத்திலிருந்து நிர்வாகிகள் சேர்ந்து சங்க நிவாரண நிதியில் இருந்து உங்கள் ஏரியா ஜனங்களும் பணம் திரட்டி ரெண்டு லட்சத்தை கட்டிட்டாங்க ; ஆப்ரேசன் நல்லபடியாக முடிந்தது.

உங்க அம்மா நல்லாயிருக்காங்க என்று அவள் கூறியதும் இன்ப மழையில் நனைந்தான். அந்தநேரத்தில் குடியிருப்போர் நலச்சங்கத்திலிருந்து ஒரு நிர்வாகி ஒருவர் அந்த இடத்தில் வந்து தம்பி செழியா உங்கம்மாவுக்கு உடம்புக்கு முடியலன்னுன்று கேள்விப்பட்டதும் நாங்க ரொம்ப வருத்தப்பட்டோம் உங்க அம்மாவோட அன்பான பேச்சு பிறருக்கும் உதவுற குணம் அவங்களோட அணுகுமுறை இதையெல்லாம் நாங்க மறக்க முடியாது. நீ பணத்துக்காக பல இடங்களில் அலைஞ்சதையும் கேள்விப் பட்டோம் அதனால நாங்கெல்லாம் சேர்ந்து உதவி செஞ்சோம். அய்யா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதுன்னு என்று தெரியவில்லை.

அம்மவோட ஆப்ரேசனுக்காக பல இடங்களில் பணத்தை கேட்டு பார்த்தேன். ஒரு இடத்தில் கூட கிடைக்கலை. நானும் போராடி பார்த்தேன்; எதுவும் முடியல; ஊர்ல இருக்கிற சொந்தப் பெரியப்பாவே பணத்தை கையில் வச்சிகிட்டு உதவி செய்ய மனசுயில்ல; அனாதையாய் நிர்கதியாய் கண்ணைக்கட்டி காட்டுகுள்ள விட்ட மாதிரி நான் தவிச்சேன்.

இந்த நேரத்தில கடவுள் மாதிரி வந்து ஆப்ரேசனுக்கு உதவி பண்ணினீங்களே. நீங்க தான் உன்மையான தெய்வங்கள் உன்மையான சொந்தங்கள் என்று கண்ணீர்மல்க அந்த குடியிருப்போர் நல சங்கநிர்வாகியைக் கைகூப்பி வணங்கினான்.

அவரும் தம்பி செழியா நாங்களும் சாதரனமான வங்கதான் உங்க அம்மாகிட்ட இருக்கிற நல்ல குணத்துக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும். உங்கம்மா எல்லாத்துகிட்டயும் அன்பா பேசுவாங்க. நம்ம தெருவில் இருக்கிற அம்மன் கோவிலுக்கு தினம்தோறும் காசு வாங்காமப் பூ கொடுப்பாங்க. பிறருக்கு உதவி செய்ற நல்ல மனசு இருக்கு இதையெல்லாம் பார்த்துதான் நம்ம குடியிருப்போர் நலச்சங்கத்திலிருந்து உங்க அம்மாவுக்கு ஆப்ரேசனுக்கு உதவி பண்ணினோம் என்றார். சங்க நிர்வாகி அதற்கு உங்களுக்கு கோடி நன்றிங்கய்யா என்று அவருடைய கரங்களை பற்றினான்.

புதிய சொந்தங்கள் கிடைத்துவிட்ட மாதிரி சந்தோசத்தில் அம்மாவை பார்க்க ஆஸ்பத்திரிக்குள் சென்றான் செழியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *