செய்திகள்

புதிய கேபினட் கமிட்டிகளை அமைத்த மத்திய அரசு

புதுடெல்லி, ஜூலை 4-–

மோடி தலைமையிலான மத்திய அரசு பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டியை அமைத்துள்ளது.

ஒரு சில விவகாரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகள் சம்பந்தப்படும் போது, கேபினட் கமிட்டி கூடி முடிவுகளை எடுக்கவேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இதற்காக பிரதமர் கேபினட் கமிட்டிகளை அமைப்பது வழக்கம்.

அந்த வகையில் 3–-வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேற்று புதிய கேபினட் கமிட்டிகளை அமைத்தது. அதன் விவரம் பின்வருமாறு:-

நியமன கமிட்டி

கேபினட் கமிட்டிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது நியமனத்திற்கான கமிட்டிதான். இதில் மத்திய அரசின் முக்கிய பதவிகள் மற்றும் முப்படை தளபதிகள் நியமனம், ரிசர்வ் வங்கி ஆளுநர் நியமனம் போன்ற பல முக்கிய நியமனங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும். இந்த கமிட்டியின் உறுப்பினர்களாக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு கமிட்டி

சட்டம் ஒழுங்கு, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கொள்கை முடிவுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கும். அத்துடன் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களையும் இந்த கமிட்டி ஆலோசித்து முடிவு எடுக்கும்.

இந்த கமிட்டியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பொருளாதார விவகாரங்கள் கமிட்டி

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் பொருளாதாரத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து முடிவுகளை எடுக்கும்.

இந்த கமிட்டியில் பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோருடன் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பஞ்சாயத்து ராஜ் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

நாடாளுமன்ற கமிட்டி

நாடாளுமன்றத்தின் கூட்ட தொடரை தீர்மானிக்கும். அத்துடன் நாடாளுமன்றத்தில் அரசின் சட்ட முன்வரைவு மற்றும் அரசின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து விவாதித்து முடிவு எடுக்கும்.

இந்த கமிட்டியின் உறுப்பினர்களாக பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஆகியோருடன் சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, சமூக நீதித் துறை அமைச்சர் வீரேந்திர குமார், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் ஜுவால் ஓரம், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் ஜல் சக்தித்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இந்த கமிட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய சட்டத்துறை இணை அமைச்சர்களான அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் எல்.முருகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அரசியல் விவகாரங்களுக்கான

கேபினட் கமிட்டி

அரசியல் விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டியில் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜே.பி. நட்டா, கிஞ்ஜரபு ராம் மோகன் நாயுடு, ஜித்தன் ராம் மாஞ்சி, சர்பனந்தா ஸ்னோவால், பூபேந்தர் யாதவ், அன்னபூர்னா தேவி, கிரண் ரிஜிஜு, கிஷன் ரெட்டி இடம பிடித்துள்ளனர்.

பாராளுமன்ற விவகாரத்துக்கான கேமினட் கமிட்டியில் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜிவ் ரஞ்சன் சிங், நாயுடு, ரிஜிஜு, வீரேந்திர குமார், ஜூயல் ஓரம், சிஆர் பாட்டில் இடம் பிடித்துள்ளனர்.

மேலும் 3 கேபினட் கமிட்டிகள்

இவை தவிர இடவசதி கேபினட் கமிட்டி, முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான கேபினட் கமிட்டி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான கேபினட் கமிட்டி ஆகிய கேபினட் கமிட்டிகள் அமைக்கப்பட்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கமிட்டியில் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஜனதா தளம், சிவ சேனா, லோக் ஜனசக்தி கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் இடம் பிடித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *