செய்திகள்

புதிய குற்றவியல் சட்டங்கள்: மாநில அளவில் திருத்தங்களை செய்ய நீதிபதி தலைமையில் ஒரு நபர் குழு

Makkal Kural Official

சென்னை, ஜூலை 9–-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்களை மேற்கொள்ள சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்து வந்தன. இந்த நிலையில் மத்திய அரசால் அந்த சட்டங்கள், பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்‌ஷயா சட்டம் என மாற்றப்பட்டு கடந்த 1ம்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும், அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத்தில் 146 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டு, மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை அறிந்துகொள்ள விருப்பமில்லாமல், மத்திய அரசு அவசர கோலத்தில் இச்சட்டங்களை நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஏதுமின்றி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றியது.

நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையினரின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில், இந்தப் புதிய சட்டங்களில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன? என்பதைத் தெளிவாக முதலமைச்சர், கடந்த ஜூன் 17ம்தேதி எழுதிய கடிதத்தின் மூலமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த புதிய சட்டத்தின் சில அடிப்படை பிரிவுகளில் தவறுகள் இருப்பதோடு, மாநில அரசுகளிடம் இருந்து முழுமை யாக கருத்துகளைப் பெறாமல் அவை இயற்றப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டி இருந்தார். மேலும், அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்றும், முறையாக அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்ற பின்னரே இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில், இப்புதிய சட்டங்களில் என்னென்ன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசின் தலைமை வக்கீல், தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், பொதுத்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், காவல்துறை இயக்குனர் மற்றும் அரசு குற்றவியல் வக்கீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் முடிவில், இந்தப் புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உள்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரவேண்டும்? என்பதை ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைக்க, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழுவை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இக்குழு, இந்த புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் வக்கீல் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டுவரலாம்? என்பது பற்றிய தனது அறிக்கையை ஒருமாத காலத்திற்குள் அரசுக்கு வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *