உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்
பாலி, நவ. 15–
புதிய உலகை உருவாக்கும் பொறுப்பு நமது தோள்களில் உள்ளது என ஜி–20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள நூசா துவா பகுதியில் ஜி–20 நாடுகளின் உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவரை இந்தோனேசிய பிரதமர் ஜோகோ விடோடோ விமான நிலையத்தில் வரவேற்றார்.
இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில் ‘உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு’ என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையும் தான் தேர்வு. இந்த உலகம் முழுவதும் இணைந்து அதற்கான வழியை அமைக்க வேண்டும். இதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறேன்.
புதிய உலகை
உருவாக்கும் பொறுப்பு
கடந்த நூற்றாண்டில் இரண்டாம் உலகப்போர், உலகத்தில் பேரழிவை ஏற்படுத்தியது. அதன் பிறகு, அக்கால தலைவர்கள், அமைதியின் பாதையில் செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டனர். தற்போது நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
கொரோனா காலத்திற்கு பின் புதிய உலகை உருவாக்கும் பொறுப்பு நமது தோள்களில் உள்ளது. உலகில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சியை காட்ட வேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயம் ஆகும். உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான வழியை நாம் ஏற்படுத்த வேண்டும்.
அடுத்த ஆண்டு, புத்தரும், மகாத்மா காந்தியும் பிறந்த புண்ணிய பூமியில் நாம் அனைவரும் ஜி–20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கூடும் போது நாம் உலகிற்கு அமைதிக்கான தகவலை இன்னும் அழுத்தமாக கூறுவோம். இதற்கு அனைத்து தலைவர்களும் ஒப்பு கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
உலகின் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அத்தியவாசிய பொருட்களின் நெருக்கடி உள்ளது. அனைத்து நாடுகளிலும் ஏழை மக்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர். தினசரி வாழ்க்கை நடத்துவது அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இரட்டை நெருக்கடியை சமாளிக்க அவர்களிடம் நிதி வசதி இல்லை. அதனை அவர்களால் திரட்டவும் முடியவில்லை.
இந்த பிரச்சினைகளில் ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புகள் தோல்வியடைந்து விட்டன என்பதை நாம் அனைவரும் ஒப்பு கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஏற்ப சீர்திருத்தங்களை செய்ய நாம் அனைவரும் தவறிவிட்டோம். இன்று உலகம் ஜி–20 அமைப்பில் இருந்து அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. மேலும், இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.
130 கோடி மக்களின்
உணவுக்கு உறுதி
கொரோனா காலத்தில் 130 கோடி மக்களுக்கு உணவு கிடைப்பதை இந்தியா உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், தேவைப்பட்ட பல நாடுகளுக்கு உணவு தானியங்களையும் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. உணவு பாதுகாப்பு அடிப்படையில், உரத்திற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சினை. இந்த உரத்தட்டுப்பாடு, நாளைய உணவுக்கான பிரச்சினை. அதற்கு உலக நாடுகளிடம் எந்த தீர்வும் இல்லை. உரம் மற்றும் உணவு தானியங்கள் ஆகிய இரண்டின் விநியோக சங்கலியை நிலையானதாகவும் உறுதியானதாகவும் பராமரிக்க ஜி–20 அமைப்பு நாடுகள் பரஸ்பர ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்.
சர்வதேச தினை ஆண்டு
இந்தியாவில், நிலையான உணவு பாதுகாப்பை உருவாக்க, இயற்கை விவசாயம், திணை போன்ற சத்தான மற்றும் பாரம்பரிய உணவு தானியங்களை ஊக்கப்படுத்துகிறோம். தினை பொருட்கள் உலகளாவிய ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசியை தீர்க்கும். அடுத்த ஆண்டு நாம் அனைவரும் சர்வதேச தினை ஆண்டை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும். சர்வதேச வளர்ச்சிக்கு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மிகவும் முக்கியம். உலகத்தில் அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா மாறி உள்ளது.
எரிசக்தி விநியோகத்திற்கான கட்டுப்பாடுகளை யாரும் ஊக்குவிக்கக்கூடாது. எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். சுத்தமான எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது. 2030க்குள், இந்தியாவின் மின்சார தேவையில் பாதியளவானது சுத்தமான எரிசக்தியில் இருந்து உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஜி–20 மாநாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இந்தியா உலகம் தலைமை ஏற்கும் போது, இந்த பிரச்சினைகளுக்கு சர்வதேச அளவில் ஒரு மித்த தீர்வு ஏற்படுத்த செயல்படுவோம்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ரஷ்ய அதிபர்
பங்கேற்கவில்லை
சர்வதேச அளவில் ஜி–20 கூட்டமைப்பு முக்கியப் பங்கு வகித்து வருகிறது. உலகின் சுமார் 85 சதவீத பொருளாதார மதிப்பையும், சுமார் 75 சதவீத வர்த்தகத்தையும், சுமார் 65 சதவீத மக்கள் தொகையையும் ஜி20 கூட்டமைப்பு நாடுகளே கொண்டுள்ளன. அந்நாடுகள் எடுக்கும் முக்கிய முடிவுகள், சர்வதேச அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும்.
கொரோனா தொற்று பரவல், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், சர்வதேச கடன் பிரச்சினை அதிகரிப்பு, பணவீக்கம் உள்ளிட்டவற்றால் பல நாடுகளின் பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜி–20 கூட்டமைப்பின் மாநாடு இந்தோனேசியாவின் பாலி தீவில் இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
உக்ரைன் மீதான போர் நெருக்கடி காரணமாக ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.
இந்தியாவிடம் ஜி–20
தலைமை பொறுப்பு
பாலி மாநாடு முடிவடையும்போது, ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இந்தியாவிடம் ஒப்படைக்கவுள்ளார். கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை டிசம்பர் 1–ந் தேதியில் இருந்து இந்தியா அதிகாரபூர்வமாக ஏற்கவுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி–20 மாநாட்டுக்கு வருகை தருமாறு உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளேன் என்று பிரதமர் மோடி விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் ஜி–20 கூட்டமைப்பை இந்தியா தலைமையேற்று வழிநடத்தும். சர்வதேச அளவிலான சமச்சீர் வளர்ச்சி, ஒருங்கிணைந்த எதிர்காலம் ஆகியவற்றை அக்கொள்கை உறுதி செய்யும்’ என்றும் பிரதமர் மோடி குறிப்பிடப்பட்டுள்ளார்.