சென்னை, ஜூலை.30-
தக்காளி விலை மீண்டும் உயரத் தொடங்கி புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.180க்கும், சில்லறை விலையில் ரூ.200க்கும் விற்பனை ஆனது.
கடந்த மாதம் ஒரு மாதத்திற்கு முன்பு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.28 முதல் ரூ.32க்கு விற்பனை ஆனது. அந்த நேரத்தில் வெளி மார்க்கெட்டில் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வையே அப்போது மக்களால் தாங்க முடியவில்லை.
ஆனால் அதன் பிறகு கிடுகிடுவென தக்காளி விலை உயரத் தொடங்கியது. அண்டை மாநிலங்களில் மழை, தமிழ்நாட்டில் போதிய விளைச்சல் இல்லாதது போன்ற காரணங்களால் தக்காளி விலை ஏறுமுகத்தை தொட்டது அதன்படி இம்மாத தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.110 வரை விற்கப்பட்டது.
இந்த நிலையில் பொதுமக்களின் நலன் கருதி கூட்டுறவுத் துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் பண்ணை பசுமை கடைகள், நியாயவிலைக் கடையில் மலிவு விலையில் தக்காளியை விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு, தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்துடன் தக்காளி விலை இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் ரகம் தக்காளி கிலோ ரூ.150க்கும், இரண்டாம் ரகம் ரூ.140க்கும், 3ம் ரகம் ரூ.130க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.170 முதல் ரூ.180 வரை விற்பனையானது. இது புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது. மொத்த மார்க்கெட்டிலேயே இந்த விலை என்ற நிலையில், வெளிமார்க்கெட் மற்றும் சில்லறை கடைகளில் ரூ.190 முதல் ரூ.200 வரை விற்கப்பட்டது.
தக்காளி வரத்து போதிய அளவுக்கு இல்லாததாலேயே அதன் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தவண்ணம் உள்ளது. வரும் நாட்களிலும் வரத்து குறையுமானால், மொத்த மார்க்கெட்டிலேயே ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை செல்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.