செய்திகள் நாடும் நடப்பும்

புதிய உச்சத்தில் போர் பதற்றம்


தலையங்கம்


கடந்த இரண்டு நாட்களாக இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை கண்டு வருகிறது. இதன் பின்னணியில் நிலையற்ற உலக பொருளாதாரமும் எண்ணை வள மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றமும் முக்கிய காரணங்களாக இருக்கிறது.

அமெரிக்காவில் தொடரும் பணவீக்கமும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வங்கி வட்டிச்சுமை அதிகரிக்குமோ? என்ற அச்சக்கேள்வியை எழுப்பி வருகிறது.

கடந்த மாதம் மாஸ்கோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி துவங்கும் முன் அங்கு தோன்றிய 11 பேர் தீவிரவாத கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட எல்லா திசைகளிலும் அப்பாவி பொதுமக்கள் பலர் நொடிப் பொழுதில் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அழித்து விடுவேன் என்று ரஷ்யா அறிவித்த உடன் அப்பிராந்தியமே நிலைகுலைந்து நிற்கிறது.

உக்ரைன் போரின் தாக்கம் தொடர்ந்து கொண்டிருக்க இப்படி மீண்டும் ஒரு சவால் துவங்கி இருக்கிறது.

அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட ஈரானின் ராணுவத் தளபதி காசிமுக்கு முன்பு நடத்தப்பட்ட நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஐ.எஸ்.கே இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலை நிகழ்த்தியது. இதில் 80 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துருக்கி, சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் இப்போது ரஷ்யாவிலும் தாக்குதல் நிகழ்த்தி உள்ளது. ஐ.எஸ். அமைப்பின் பயங்கரவாதக் கொடுங்கரம் மீண்டும் வலிமை பெற்று வருவதையே இந்தத் தாக்குதல்கள் உணர்த்துகின்றன.

ஈராக்கிலும் சிரியாவிலும் மையம் கொண்டிருந்த இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) தீவிரவாத அமைப்பு 6 ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய தொடர் தீவிரவாதத் தாக்குதல்கள், அந்த அமைப்பு புத்துயிர் பெற்றுவிட்டது. அல்லது பழைய வேகத்தில் தாக்குதல்களை நிகழ்த்த தொடங்கி விட்டது என்கிற அச்சத்தையே எழுப்புகின்றன.

இஸ்ரேல் மீது ஈரான் ஏப்ரல் 14 அன்று நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல், மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தில் ஒரு புதிய போருக்கான தொடக்கமோ என்கிற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் உள்ள தங்கள் துணைத் தூதரகத்தில் ஏப்ரல் 1 அன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேலைக் குற்றம்சாட்டி வந்த ஈரான், அதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

விஷயம் இப்போதைக்கு முடிவுக்கு வந்தாலும், ‘இஸ்ரேல் திருப்பித் தாக்கினால், பெரும் பலத்துடன் திருப்பியடிப்போம்’ என அந்நாடு சூளுரைத்திருக்கிறது.

இஸ்ரேல் நிச்சயம் திருப்பித் தாக்கும் என்பதை ஈரான் அறிந்திருக்கிறது என்றாலும் நிழல் யுத்தத்திலிருந்து வெளியே வந்து நேரடியான போருக்கு அந்நாடு தயாராகிவிட்டது என்பதையே இத்தாக்குதல் உணர்த்துகிறது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் 6 மாதங்களைத் தாண்டி தொடரும் நிலையில் வரலாற்றில் முதல்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது ஈரான்.

இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7, 2023 தாக்குதலைத் தொடர்ந்து மேற்கு ஆசியா – மத்திய கிழக்குப் பகுதியில் எழுந்த அரசியல் நெருக்கடி, பிராந்தியப் போராக மாறிவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கையாக அமெரிக்கா எல்லா விதமான ஆதரவையும் இஸ்ரேலுக்கு வழங்கி வந்தது. எனினும் ஜெனீவா உடன்படிக்கை, வியன்னா உடன்படிக்கை உள்ளிட்ட சர்வதேச உடன்படிக்கைகளை மதிக்காமல் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள், நிலைமையை மேலும் சிக்கலாக்கி இருக்கின்றன.

ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட போர் நிறுத்தத் தீர்மானங்களை மேற்குலகின் உதவியுடன் முறியடித்து வந்த இஸ்ரேல் ஈரானின் தாக்குதலைத் தொடர்ந்து ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இது இஸ்ரேலின் இரட்டை நிலைப்பாட்டை மட்டுமல்லாமல், ஈரானின் தாாக்குதலைக் கண்டித்திருக்கும் மேற்குலகின் இரட்டை நிலைப்பாட்டையும் மீண்டும் அம்பலப்படுத்தி இருக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் உரையாற்றிய பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டர்ஸ், அமைதியை நிலைநாட்ட வேண்டிய கூட்டுப்பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அது பிராந்திய அமைதியாக இருக்கட்டும் அல்லது சர்வதேச அமைதி பாதுகாப்பாக இருக்கட்டும். ஆனால் அந்தக் கூட்டுப்பொறுப்பு இப்போது குறைத்து மதிப்பிடப்படுகிறது. இந்தத் தருணத்தில் மத்தியக் கிழக்குப் பிராந்தியமோ இந்த உலகமோ இன்னொரு போரைத் தாங்காது’ என பேசியிருக்கிறார்.

ஆக ஐரோப்பிய பகுதியிலும் மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் ஏற்பட்டுள்ள போர் பதட்டம், அமைதி நிலவும் ஆசியப்பகுதியில் பல சிக்கல்களை ஏற்படுத்த துவங்கி விட்டது.

டாலர் விலை வீழ்ச்சி, கச்சா எண்ணை விலை ஏற்றமும் பங்கு மார்க்கெட்டில் கடந்த இரண்டு நாட்களில் 2000 புள்ளிகள் விலை சரிவை ஏற்படுத்தி உள்ளது.

பங்கு வர்த்தகர்கள் நில், கவனி, அச்சத்தில் விற்றுவிட்டால் நல்லது என எண்ணாதே;, தடுமாற்றம் சீராகி விடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *