நாடும் நடப்பும்

புதிய உச்சத்தில் புது பங்கு வெளியீடுகள் எண்ணிக்கை


நாடும் நடப்பும்


கடந்த வார இறுதியில் மும்பை பங்குச் சந்தை குறியீடு 59,704 என்ற புதிய உச்சத்தை தொட்டு விட்டு இவ்வார துவக்கத்தில் சற்றே குறைவாக இருப்பதை பார்த்தால் 60,000 புள்ளிகள் என்ற உயரம் முதலீட்டாளர்களுக்கு மலைப்பைத் தருவதால் தயக்கத்துடன் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 37,800 புள்ளிகளாக இருந்த பங்கு மார்க்கெட்டில் முதலீட்டாளர்கள் நுழைய சரியான நேரமா? என்ற கேள்வி எழத்தான் செய்தது.

அது கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் நிலைகொண்டு இருந்தது. அந்தக் கட்டத்தில் பங்குச் சந்தையில் விலை வீழ்ச்சி இருக்கத்தான் செய்தது. ஆனால் அன்றிலிருந்து ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 60,000 புள்ளிகள் என்ற வளர்ச்சி அபரீமிதமானது என்பதை உலக பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

அதே நம்பிக்கை இன்று இந்திய முதலீட்டாளர்களுக்கு வந்து விட்டது. கடந்த மாதத்தில் 29 நிறுவனங்கள் புது பங்கு வெளியீடு செய்யத் தயாராக வருகிறது. அதற்காக செபி ஒப்புதல் பெற விண்ணப்பித்தும் விட்டனர்.

கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத புதிய வேகத்தில் இப்படி 29 நிறுவனங்கள் புதுப் பங்கு வெளியீடு செய்ய முடிவெடுத்து இருப்பது நம் பொருளாதாரத்தின் மீதிருக்கும் நம்பிக்கையாகும்.

2004ல் ஒரே மாதத்தில் 22 புதிய பங்கு வெளியீடுகளுக்கு செபி விண்ணப்பங்களை பெற்றது. பிறகு 2006ல் பிப்ரவரியிலும் டிசம்பர் மாதத்திலும் நிகழ்ந்தது. பிறகு மீண்டும் 2010ல் செப்டம்பரிலும் பார்த்தோம்.

புது பங்கு வெளியீடுகள் அதிகரித்த கட்டத்தில் பங்குச் சந்தையில் எழுச்சி அரும்பியது. பங்குகளின் விலைகள் பூத்துக் குலுங்கியது!

ஆனால் ஒரு கட்டத்தில் புது பங்குகளின் மீது இருந்த மோகம் குறைந்ததுடன் உலக பொருளாதார நெருக்கடிகளும் தோன்ற பங்கு மார்க்கெட்டில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. பங்குக் குறியீடு 17% சரிவையும் சந்தித்ததால் புது பங்கு வெளியீடுகள் வரத்து நின்றது.

கடந்த 17 வருடங்களில் அதிகப்படியாக ஒரே மாதத்தில் 6 பங்கு வெளியீடுகளே என்ற நிலை உருவானது!

இந்நிலையில் இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் மிக அதிகபட்சமாக 29 நிறுவனங்கள் புதுப் பங்கு வெளியீடு செய்ய அனுமதி கேட்டிருப்பது நமது பொருளாதரத்திற்கு புதுத் தெம்பைத் தருகிறது.

கடந்த 15 மாதங்களாக வீட்டிலிருந்தே படிப்பு, வேலை அல்லது ஓடிடி தளத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் என்று சமுதாய மாற்றம் ஏற்பட்டது அல்லவா? அதில் பல இளைஞர்கள் டிஜிட்டல் யுக முதலீடுகளிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளார்கள்.

சமீபத்தில் ஸ்டேட் பேங்க் அறிவிப்பு சுட்டிக்காட்டுவது புது முதலீட்டாளர்கள் 10% கடந்த 12 மாதங்களில் அதிகரித்துள்ளதாம்.

அவர்களது வருகையால் புது பங்கு வெளியீடுகளின் விற்பனையும் அதிகரித்து இருக்க வேண்டும். ஆகவே பல நிறுவனங்கள் புது நம்பிக்கையுடன் புது பங்கு வெளியீடு செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள்.

பல பெரிய நிறுவனங்ளும் நிதிப் பற்றாக்குறையால் திணறுவதும் புரிகிறது. முழு ஊரடங்கு காலக்கட்டத்தில் வர்த்தக தேக்கம் ஏற்பட்டதால் வியாபாரம் திணறியது. அவர்களுக்குத் தேவையான வங்கிக் கடனாக வாங்கி விட்டால் உடனடியாக கையிருப்பு அதிகரித்து விடும்.

ஆனால் கடன் வட்டி சுமையை சமாளித்து அசலையும் திரும்பச் செலுத்தும் அளவிற்கு லாபகரமாக இயங்க சில வருடங்கள் தாமதமானால் வங்கி வட்டி தலைக்கு மேல் உயர்ந்து மூழ்கடித்து விடும் அபாயமும் இருக்கிறது.

ஆகவே தங்களது நிறுவனத்தின் மதிப்பையும் அதிகரித்துக் கொள்ளவும் உடனடியாக திரும்பத் தர வேண்டிய அவசியமற்ற புதுப் பங்கு வெளியிட்டு நிதி திரட்டுவது நல்ல முடிவாக இருப்பதால் ஆகஸ்ட் மாதத்தில் இப்படி மிக அதிகப்படியாக 29 நிறுவனங்கள் புதுப் பங்கு வெளியீடு செய்ய வந்துள்ளனர்.

இவற்றையெல்லாம் விட முத்தாய்ப்பான ஒரு சங்கதியும் இந்த அதிகப்படி புது பங்கு வெளியீட்டிற்கு உண்டு. அது சமீபமாக செபியின் சாதகமான கொள்கைகளுமாகும்.

முன்பு பங்கு வெளியீடு செய்பவர்களை சந்தேகக் கண்ணோட்டத்தில் தான் பார்த்து வந்தோம். ஆனால் இன்றோ ஒவ்வொரு நிறுவனத்தின் பின்னணியை உணர்ந்து பங்கு வர்த்தகர்களே தீர்மானிக்கட்டும் என்ற நிலைப்பாட்டுடன் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி விட்டது செபி.

ஆகவே எளிதில் முடியும் என்ற நம்பிக்கையுடன் பல்வேறு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் நுழையத் துவங்கி விட்டனர்.

வேலியைத் திறந்து விட்டால் பயிரை மேய ஆடு, மாடுகள் நுழையும்! அது போன்றே கொள்கைத் தளர்வுகளால் அப்பாவிப் பொதுமக்களை ஏமாற்றும் பேர்வழிகள் நுழையலாம்! ஆகவே முதலீடு செய்பவர்கள் அவசரப்படாமல் நன்கு ஆராய்ந்து முதலீடு செய்வதுதான் சரியாக இருக்கும்.

கடந்த மாதம் செபி அனுமதியை நாடியிருக்கும் நிறுவனங்களில் பெரியது எல்ஐசி, பேடிஎம், பாலிசி பஜார் முதலிய நிறுவனங்கள் ஆகும்.

தற்போது 60,000 புள்ளிகளை எட்ட நெருங்கிவிட்ட பங்கு மார்க்கெட்டில் ஒரு சில சறுக்கல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் புதுப் பங்கு வெளியீடுகளில் சிறு, நடுத்தர முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்யத் தயாராகவே இருப்பார்கள்.

பங்கு குறியீடு என்பது தரமான, பெரிய முதலீடுகள் கொண்ட 30 நிறுவனங்களின் பங்கு விலைகளை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால் கடந்த 17 ஆண்டுகளில் சுமார் 1000 புது பங்கு வெளியீடுகள் வந்து அவையும் பிஎஸ்சி, என்எஸ்சி பங்கு சந்தைகளில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

ஆகையால் புது வெளியீடுகள் முடிவடைந்து அவை வர்த்தகத்திற்கு வரும் முதல் வாரங்களில் பங்குகளின் விலை உண்மையானதாக இருக்க வாய்ப்பு கிடையாது. ஆனால் விலை அதிகமாக இருந்தால் பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தான்.

இத்தருணத்தில் சராசரி முதலீட்டாளர்கள் உரிய பங்கு எது? என ஆராய்ந்து முடிவெடுப்பதில் குழப்பமிருந்தால் மியூட்சுவல் பண்டுகளில் முதலீடு செய்து காத்திருந்தால் நிச்சயமாக லாபம் இருக்கும். அதிக ரிஸ்க்கும் கிடையாது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *