செய்திகள்

புதின் ‘போர்க் குற்றவாளி’: அமெரிக்க அதிபரின் பேச்சுக்கு ரஷ்யா கடும் கண்டனம்

வாஷிங்டன், மார்ச் 17–

“உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த அமெரிக்க அதிபர், எங்கள் அதிபர் புதினை ‘போர்க் குற்றவாளி’ என அழைப்பது ஏற்புடையதல்ல, மன்னிக்கக் கூடியதும் அல்ல” என்று ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பிடன், புதின் ஒரு ‘போர்க் குற்றவாளி’. ரஷ்யப் படைகள் மருத்துவமனைகளின் மீது தாக்குதல் நடத்துகிறது. மருத்துவர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளது. உக்ரைன் அதிபர் அமெரிக்காவிடம் உதவிகளைக் கோரியுள்ளார். இந்தப் போரில் ரஷ்யாவுக்கு எதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுக்க ஆயுதங்களை வழங்கி உக்ரைனுக்கு உதவுவோம். உக்ரைனுக்கு ஸ்விட்ச் ப்ளேட் ட்ரோன்களை அளித்து ரஷ்யாவின் ராணுவ தளவாடங்களை துல்லியமாகக் கண்டறிந்து தாக்க உதவி செய்வோம்” என்று கூறினார்.

ரஷ்யா கண்டனம்

இதற்கு ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கண்டனம் தெரிவித்துள்ளார். “உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் தனது குண்டுகளால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த அமெரிக்க அதிபர் விளாடிமிர் புதினை ‘போர்க் குற்றவாளி’ என அழைப்பது ஏற்புடையதல்ல, மன்னிக்கக் கூடியதும் அல்ல” என்று அவர் கூறினார். உலகத் தலைவர்கள் பலரும் புதினை ‘போர்க் குற்றவாளி’ எனக் கூறி வந்த நிலையில் அமெரிக்க அதிபர் பிடன் மட்டும் தயக்கம் காட்டி வந்தார்.

இந்நிலையில், நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் புதின் ஒரு ‘போர்க் குற்றவாளி’ என்று முதன்முறையாக வெளிப்படையாகக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.