செய்திகள்

புதிதாக பெயர் சேர்த்தவர்களுக்கு 30–ந் தேதிக்குள் வாக்காளர் அடையாள அட்டை

சென்னை, மார்ச் 26–

புதிதாக பெயர் சேர்த்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் 30-ந்தேதிக்குள் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்த்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி வருகிற 30-ந்தேதிக்குள் முடிவடையும்.

தமிழகத்தில் தபால் ஓட்டுகளை வினியோகிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தபால் ஓட்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் தபால் ஓட்டுகளை வழங்கும் தேதிகள் முடிவு செய்யப்படும்.

80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்குரிமை உள்ளது. இதற்காக ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படும். தபால் ஓட்டு போட உரிமை பெற்றவர்களின் விவரங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளரிடம் பட்டியலாக அளிக்கப்படும்.

தபால் ஓட்டுகளுடன் வாக்குச்சாவடி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகளை வினியோகித்து அதனை பெறுவார்கள். தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6-ந்தேதிக்கு முந்தைய நாட்களுக்குள் தபால் வாக்குகள் வினியோகம் முடிக்கப்படும்.

தமிழகத்தில் மொத்தம் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தம் 10,828 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் 44,758 வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *