சிறுகதை

புகை- ராஜா செல்லமுத்து

பாரதி ஒரு நாளைக்கு நூறு சிகரெட்டுகள் வரை குடித்து விடுவான். அதுவும் டீ, சிகரெட் என்றால் அவனுக்குக் கொள்ளை பிரியம். வலது கையில் டீ கிளாஸ். இடது கையில் சிகரெட்டும் ஒரு மிடறு, டீ ஒரு தம் என்று அவன் இழுத்து விடும் ஸ்டைலை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் கூடி நிற்பார்கள்.

” பாரதி டீயும் சிகரெட்டும் இப்படி மாறி மாறி குடிக்கிறீயே ஈரம் பட்ட நுரையீரல்ல நீ இழுக்கிற புகை போய் அப்படியே தங்கிருமே? இது தப்பு இல்லையா ?”என்று கேட்டபோது

“ஏண்டா மடையா அதெல்லாம் தெரியாமலா நான் குடிச்சிட்டு இருப்பேன் என்று சிகரெட்டும் டீயும் ஒரு சேர குடிக்கும் பாரதி நண்பர்கள் திட்டும் பாேது பதில் சொல்வான்.

” பாரதி இது என்னமோ எங்களுக்கு தப்பா தெரியுது .ஒரு நாள் இல்லனா ஒரு நாள் இது பெரிய பிரச்சினையில கொண்டு போய் விடப்போகுது. அப்பதான் நம்ம செஞ்சது தப்புன்னு நீ யோசிப்ப” என்று நண்பர்கள் சொன்னாலும் அதையெல்லாம் சட்டை செய்ய மாட்டான் பாரதி .

டீ, சிகரெட், சிகரெட் டீ என்று மாறி மாறி பயணித்தது அவனின் புகைப்பயணம். ஒருநாள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது பட்டென்று மயங்கி கீழே சரிந்தான். அவனை தூக்கிக் கொண்டு போய் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தார்கள் நண்பர்கள் .

அவனைப் பரிசோதித்த டாக்டர்கள் மிரண்டு நின்றார்கள். இவருடைய நுரையீரல் பூராம் தேன்கூடு மாதிரி புகை கட்டி நிக்குது. இத வெளியேத்துறது ரொம்ப கஷ்டம். ஏன் இவ்வளவு சிகரெட் குடிப்பாரா? என்று மருத்துவர்கள் கேள்வி கேட்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்தார்கள் நண்பர்கள் .

” என்னத்த சொல்றது. டாக்டர் கிட்டயும் வக்கீல் கிட்டயும் பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லுவாங்க. நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பாத்தோம். பாரதி கொஞ்சங் கூட கேக்கல. ஒரு கையில் சிகரெட்டும் ஒரு கையில டீ கிளாஸ் மா எப்பவுமே அந்த தப்பு பண்ணிட்டே இருப்பான். நாங்க சொல்லி பாத்தோம்; அவன் திருந்தல; இன்னைக்கு பட்டுட்டான். அனுபவிக்கிறான் என்று நண்பர்கள் சொல்ல

“ஓஹோ இவர் அப்படி ஒரு புகைபிடிக்கிற ஆளா . சரி எங்களால முடிஞ்ச அளவுக்கு பாக்கிறோம்; இல்லன்னா “

என்று உதடு பிதுக்கினார்கள் மருத்துவர்கள் .

ஒரு நாள் இரண்டு நாள் என்று மருத்துவம் பார்க்கப்பட்டு ஓரளவுக்கு தேறினான் பாரதி

“ஏன் பாரதி நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பாத்தோம்; நீ கேட்கல. பாத்தியா இன்னைக்கு எந்த நிலைமையில கொண்டு வந்து விட்டிருக்கு இந்த புகை” என்று நண்பர்கள் சொல்ல

“யாருடா இவன் மனுஷனுக்கு எப்பப்ப என்னென்ன வருமோ அது வந்து தான் ஆகும். நான் சிகரெட் பிடிச்சாலும் பிடிக்கலன்னாலும் எனக்கு இப்ப வந்தது விதி அவ்வளவுதான் ” என்று ரொம்பவே அசால்ட் ஆக பேசினான் பாரதி.

” இவ்வளவு மட்டும் நீ திருந்தலயில்ல. தப்பு பாரதி நம்ம உடம்புக்கு எது கெடுதல் ன்னு நினைக்கிறோமோ அதை விட்டுரனும். அதுதான் மனுஷனுக்கு அழகு. அந்த தப்ப திரும்பத் திரும்ப செஞ்சுகிட்டு இருந்தோம்னா. அது நமக்கு மட்டும் இல்ல . நம்ம பணத்துக்கு . சுத்தி இருக்கிற குடும்பத்துக்கும் கேடு. அதனால நீ பேசறது எல்லாம் சரின்னு நினைக்காதே” என்று நண்பர்கள் சொன்னார்கள்.

அதற்கு பதில் சொல்ல முடியாமல் விழித்தான் பாரதி. இனி ஒன்னும் பிரச்சனை இல்ல. சிகரெட் பிடிக்காம பாத்துக்கங்க ” என்று நண்பர்களுக்கு விசயத்தை சொல்லிவிட்டு பாரதியை டீஜ்சார்ஜ் செய்தார்கள் மருத்துவர்கள் . அதிலிருந்து பாரதி சிகரெட்டை தொடுவதே இல்லை. அப்படி இப்படி என்று சிகரெட் பிடிப்பதற்கு எத்தனித்தாலும் உடன் இருக்கும் நண்பர்கள் அதற்கு அனுமதிப்பதில்லை.

” பாரதி இது தப்பு “என்று நண்பர்கள் சொல்ல அதை அப்படியே கடைப்பிடித்தான்.சில நாட்களில் புகை பிடிப்பதை மறந்து போயிருந்தான் பாரதி .

அன்று நண்பர்கள் கூடி இருக்கும் கூட்டத்திலிருந்து மேகமூட்டமாக புகை வெளியேறியது.” இது யார்? என்று ஓடிப் போய் பார்த்தான் பாரதி. அங்கே பாரதிக்கு அறிவுரை சொன்ன நண்பன் ஒருவன் புகைத்துக் கொண்டிருந்தான் வேகமாகச் சென்ற பாரதி அவன் கையில் இருந்த சிகரட்டைத் தட்டி விட்டான்

” உனக்கென்ன கிறுக்கு ஏதும் புடிச்சிருக்கா? நான் எந்த நிலைமையில இருக்கேன். நீங்க எல்லாம் சொல்லும் போது நான் எதுவும் கேட்கல. ஆனா இது தெரிஞ்சும் நீ சிகரெட் பிடிக்கிறியா தப்புடா “என்று நண்பருக்கு புத்திமதி சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் பாரதி.

“சூப்பர் இனிமே பாரதி சிகரட் பிடிக்க மாட்டான். அந்த நம்பிக்கை நமக்கு இருக்கு” என்று நண்பர்கள் சிரித்தார்கள் .

“என்னடா சொல்றீங்க?. ” என்று பாரதி கேட்க

“இல்ல பாரதி நீ திருந்திட்டியா இல்லையான்னு நாங்க உன்ன செக் பண்ணி பார்த்தோம். நீ நிச்சயமா இனிமே சிகரெட்டை தொட மாட்டாய். அப்படிங்கிற விஷயம் இப்ப எங்களுக்கு வந்திருச்சு. ஓகே பாரதி .உன்னோட லைஃப்ல இனி புகை வராது அப்படின்னு நினைக்கிறோம் ” என்று பாரதியை வாழ்த்தினார்கள் நண்பர்கள் .

நம்மள எப்பிடிக் குழப்பி இருக்கானுங்க? என்று சிந்தித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் பாரதி.

எங்கோ புகை பிடிக்கும் வாசனையும் புகை வருவதும் தெரிந்து அந்த திசையை நோக்கி ஓடினான் பாரதி.

அங்கே இரண்டு சிறுவர்கள் புகைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

அறிவுரை சொல்லி அவர்களைத் திருத்தினான் பாரதி.

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *