அறிவியல் அறிவோம்
பிரிட்டனில் 2008-2014 வரை நுரையீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் புகைக்கும் பழக்கம் இல்லாதவர்களில் 67% பேர் பெண்கள் எனத் தெரியவந்தது.
புகைக்கும் பழக்கம் இல்லாத பெண்களுக்கு அருகிலுள்ள புகை பிடிப்போரால் இந்த பாதிப்பு வந்திருக்கலாம் என தெரியவந்தது.
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் புகைப்பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகும் வாய்ப்பு 20-30% இருக்கிறது.
இதனால் மட்டும் உலகில் ஆண்டொன்றுக்கு 4 லட்சத்து 30 ஆயிரம் மரணங்கள் நிகழ்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இதில் 64% பேர் பெண்கள். சிகரெட் புகைதான் என்றில்லை… ஆண்கள், பெண்களுக்கு பணி ரீதியான காரணங்களும் கூட புற்றுநோய்க்கு காரணமாகின்றன.
வீடுகளில் அடுப்புக் கரியை பயன்படுத்தி சமைக்கும்போது வெளியாகும் புகை சீனப் பெண்களுக்கு எமனாக அமைந்துவிடுகிறது. இந்தியாவிலும் கூட இதே காரணத்தால் பெண்களுக்கு புற்றுநோய் வாய்ப்பு அதிகமாகிறது.
அமெரிக்காவில் 2011-13ல் நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களில் 17% பேர் புகைக்கும் பழக்கம் இல்லாதவர்கள் என்கின்றன ஆய்வுகள்.
இந்தப்போக்கு அதிகரித்து வந்துள்ளதையும் இந்த புள்ளிவிவரம் உறுதிப்படுத்துகிறது. 1990-95ல் புகைப்பழக்கம் இல்லாமல் இருந்து நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளானவர்கள் அளவு 8.9% ஆக மட்டுமே இருந்தது. ஆனால் 2011-13ல் இது 17% ஆக இருந்தது.