அருங்காட்சியத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நெடுங்காலமாக நினைத்துக் கொண்டிருந்தான் செல்வராஜ்.
தன் குடும்பத்துடன் அன்று சென்னையில் உள்ள அருங்காட்சியத்திற்குச் சென்றான். அந்த அருங்காட்சியகத்தில் விலங்குகளின் எலும்பு கூடுகள், பாடம் செய்யப்பட்ட விலங்குகள், அரிய பொருட்கள் என்று அத்தனையும் இருந்தன. .
தன் குடும்பத்துடன் அருங்காட்சியத்தை ரொம்பவே ஆவலாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான் செல்வராஜ். அவன் தன் மனைவி குழந்தைகளைப் பொழுது போக்கும் இடங்களுக்கு அழைத்துப் போவதில்லை. மாறாக அறிவு வளரும் இடங்களுக்கு மட்டுமே அழைத்துப் போவான்.
அப்படித்தான் அந்த அருங்காட்சியகத்துக்குள் இருக்கும் நூறாண்டுகள் கடந்த கன்னிமாரா நூலகத்திற்கும் அழைத்து சென்றான்.
பெரிய பெரிய அறிஞர்கள் கால் பதித்த அந்தக் கட்டிடத்திற்கு தன் குழந்தைகளையும் கூட்டி சென்று புத்தகங்களின் அறிவைத் தன் குழந்தைகளுக்கு புகட்டினான்.குழந்தைகள் ஆவலாக புத்தகங்களைத் தேடினாலும் அருங்காட்சியத்தை பார்ப்பதிலேயே அவர்களின் ஆர்வம் மிகுந்திருந்தது.
சரி அறிவு முற்றும் போது அவர்கள் புத்தகத்தைத் தொடுவார்கள் இப்போதைக்கு குழந்தைகளின் மகிழ்ச்சி தான் முக்கியம் என்று குழந்தைகளை அருங்காட்சியத்திற்கு அழைத்துச் சென்றான்.
அருங்காட்சியகத்தைச் சுற்றி அந்தக் கால அரசர்கள், ஆங்கிலேயர்கள் போருக்குப் பயன்படுத்திய பீரங்கிகளைச் சுற்றி வைத்திருந்தார்கள்.’ அந்தப் பீரங்கிகளுக்கு கீழே அது பயன்படுத்தப்பட்ட வருடம். பயன்படுத்திய அரசரின் பெயர்களை எழுதி ஒட்டியிருந்தார்கள். அந்தப் பீரங்கிகளை எல்லாம் பார்த்த செல்வராஜ் மகன்,
அப்பா இதெல்லாம் என்னது? என்று விளங்காமல் கேட்டான் அந்தச் சிறுவன்.
இதெல்லாம் அந்தக் காலத்துல இருந்தவங்க அரசாளும் போது பயன்படுத்திய பீரங்கி என்றான் செல்வராஜ்.
அப்படின்னா என்ன என்று கேட்டான் ஒன்றும் அறியாத சிறுவன்.
மனிதர்களை கொல்வதற்கும் அவர்களை அடக்கி ஆள்றதுக்கும் தயாரிக்கப்பட்டது தான் இந்தப் பீரங்கிகள் என்றான் செல்வராஜ்
அப்போதும் விளங்காத அந்தக் குழந்தை தலையைச் சொரிந்து கொண்டு பீரங்கிகளைப் பார்த்துக் கொண்டே வந்தான்.
எத்தனை மனிதர்களை , எத்தனை உயிர்களைக் காவு வாங்கிய இந்த பீரங்கிகள் இப்போது உறங்கிக் கொண்டிருக்கின்றன என்பதைத் தன் மனத் திரைக்குள் ஓட்டி பார்த்தான் செல்வராஜ்.
பீரங்கியை உற்றுக் கவனித்தான் . சுற்றிச் சுற்றி வந்து அங்கிருந்த மொத்தப் பீரங்கிகளைப் பார்த்தபோது,
அவனுக்குள் ஒரு வருத்தம் ஏற்பட்டது. கொலைக் கருவியைக் காட்சி பொருளாக வைத்திருப்பது கூடாது. இதெல்லாம் அழிக்க வேண்டிய ஒன்று. அடையாளப்படுத்த வேண்டிய ஒன்று அல்ல என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு வந்து கொண்டிருந்தான் செல்வராஜ்.
அப்போது செல்வராஜின் மகன் அப்பா, அப்பா அங்க பாத்தியா? என்று கேட்டான்.
எங்க ? என்று கேட்டுத் திரும்பினார் செல்வராஜ்.
அங்கு ஒரு பீரங்கியில் குருவிக்கூடு கட்டியிருந்தது. பீரங்கிக் குழாய்க்குள் குருவிக் கூடு கட்டி குஞ்சு பொரித்திருந்தது. அதைப் பார்த்த குழந்தை கைதட்டி சிரித்தது . குருவிகள் பீரங்கிக்குள் சிரித்துக் கொண்டிருந்தன.
தாய்க் குருவிகள் குஞ்சு குருவிகளிடம் ஏதேதோ பேசி விளையாடிக் கொண்டிருந்தன.
பீரங்கிக்குள் கூடு கட்டியிருந்த குருவிக்கூட்டைத் தன் செல்போனில் புகைப்படங்கள் எடுத்தான் செல்வராஜ் .
அந்தப் புகைப்படம் செல்வராஜுக்கு கோடிக்கணக்கான கதையை சொன்னது.
இதே பீரங்கி துவாரத்தின் வழியாக சீறிப்பாய்ந்த குண்டுகள் எத்தனை உயிர்களைப் பலி வாங்கியிருக்கும் .எத்தனை மனிதர்களைக் கொன்றிருக்கும்; எத்தனை அசுரத்தனமான வாய் இது என்று அந்த பீரங்கியின் வாயைப் பார்த்தான்.
இலை தழைகள் கொண்டு அந்தக் குருவி தன் கூட்டை கட்டி இருந்தது. அழகாக குஞ்சுகள் விளையாடிக் கொண்டிருந்தன.
காலம் எதையும் மாற்றி விடும் வல்லமை படைத்தது. இந்தப் பயங்கர பீரங்கி எத்தனை உயிர்களை காவு வாங்கியது. இப்பாேது இந்தப் பீரங்கிக்குள் உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன
இதுதான் உலகம். நாம் எதைச் செய்கிறோமோ அதற்கு மாறாகவே நிகழும் என்பது என்பதற்கு இந்த பீரங்கி சாட்சி என்று நினைத்துக் கொண்டு பீரங்கிகளைச் சுற்றி வந்தான் செல்வராஜ் .
அவனுடைய மகன் இன்னொரு பீரங்கியில் குருவிகள் கூடுகட்டியிருப்பதாகக் கத்தினான்.
அபாயகரமான இருந்த ஒரு பீரங்கியை விட்டு இன்னொரு அபாயகரமான பீரங்கியை நோக்கி நடந்து கொண்டிருந்தான் செல்வராஜ்.
அந்த பீரங்கிக்குள் குருவிகளின் சத்தம் குதூகலமாக கேட்டுக் கொண்டிருந்தன.