செய்திகள்

பீகார் மாற்றங்கள்: பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு புதிய சவால்


ஆர். முத்துக்குமார்


அரசியலில் மாற்றங்களே நிரந்திரம் என்பதை வலியுறுத்துவது போல் பீகாரில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இது பாரதீய ஜனதாவிற்கு புது சாவல் என்பது மட்டுமின்றி பிரதான எதிர்க் கட்சியாக செயல்பட்டு வரும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் புது தலைவலியாக மாறும் அபாயம் உண்டு!

பீகாரில் பாரதீய ஜனதாவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்டதாக அக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் அறிவித்து விட்டு காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியில் புது மாற்றங்களை அறிவித்துள்ளார்.

2015 முதலே அம்மாநில முதல்வராக தொடரும் நிதிஷ் இம்முறை பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி விட்டார். 8 வது முறையாக அம்மாநில முதல்வராக அப்பொறுப்பில் தொடர்கிறார்.

இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் எதிர்க்கட்சியின் தலைவர், லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ்வை தங்களது கூட்டணியில் இழுத்துக் கொண்டு அவருக்கு துணை முதல்வர் பொறுப்பையும் தந்துள்ளார்.

இது தேசிய அரசியலில் குறிப்பாக 2024 பொதுத் தேர்தலில் புதிய மாற்றங்களுக்கு வித்திடும் வல்லமை உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவே நிதிஷ் குமார் கூட்டணியை முறித்துக் கொண்டதாக பாரதீய ஜனதா கட்சி விமர்சித்தது. இதனை நிதிஷ் குமார் மறுத்தார். தனக்கு அத்தகைய விருப்பமில்லை என்றார்.

இது குறித்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறும்போது:–

‘நிதிஷ் குமார் நிர்வாக அனுபவம், சமூக அனுபவம் கொண்டவர். மாநிலங்களவை தவிர மற்ற அனைத்து அவைகளிலும் உறுப்பினராக இருந்துள்ளார். மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மோடி பிரதமராகும் போது நிதிஷ் குமார் ஏன் பிரதமராக கூடாது?’ என்றார்.

தேஜஸ்வி மேலும் கூறுகையில், ‘மத்திய விசாரணை அமைப்புகள் எனது வீட்டிலேயே அலுவலகம் தொடங்கலாம். சோதனைக்காக ஏன் 2 மாதங்களுக்கு ஒரு முறை வருகிறீர்கள்? நிதிஷ் குமாருடன் கூட்டணி அமைத்தது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல. தன்னிச்சையாக நடந்தது’ என்று தெரிவித்தார்.

லல்லு கட்சியுடன் நிதிஷ் சேர்ந்ததை சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், திமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன. எனினும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் ராகுல், பிரியங்கா மற்றும் ஆத் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இன்னும் நிதிஷுக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி நிதிஷ் குமார் தெரிவித்துள்ள ஓரு கருத்து என்னால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முடியும். ஆனால் எனக்கு பிரதமர் பதவியை பிடிக்கும் ஆசை கிடையாது.

ஆனால் 2024க்கு பிறகு பிரதமர் பதவியில் நரேந்திர மோடி இருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.

இப்படி ஒரு புது கூட்டணியை நான் ஏற்படுத்துவேன் என்று கூறுவதுடன் லல்லு, ராப்ரி தேவியின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தங்களது புது கூட்டணியில் இணைத்துள்ள சமார்த்தியம் என்ற கோணத்தில் பார்க்கும்போது சோனியா, ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் இயங்கி வரும் நிலைக்கு பெரிய சவாலாகவே மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.