செய்திகள்

பீகாரில் லல்லு பிரசாத்துக்கு சொந்தமான 15 இடங்களில் சிபிஐ சோதனை

பாட்னா, மே 20–

பீகாரில் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லல்லு பிரசாத் யாதவ் மீது சிபிஐ புதிய ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளது. லல்லு பிரசாத் யாதவ் மட்டுமல்லாது அவரது மகள் மிசா பாரதி உள்ளிட்ட குடும்பத்தினர் சிலர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. இதனையடுத்து பீகாரில் ஒரே நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.பீகார் தலைநகர் பாட்னாவில் மட்டும் 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

1991-–ம் ஆண்டு 1996-–ம் ஆண்டு பீகார் முதல்வராக இருந்தார் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ். அவரது ஆட்சிக் காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக அரசு கருவூலங்களில் இருந்து 950 கோடி ரூபாய் பணம் மோசடியாக பெறப்பட்டது என்று வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டன. இதுவரை 5 வழக்குகளில் லல்லு பிரசாத் யாதவுக்கு 19 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 5-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லல்லு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம். அவருக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 60 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த மாதம் தான் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

இத்தகைய சூழலில் அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிந்து சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. இந்தமுறை, அரசுப் பணி நியமனங்களில் முறைகேடு செய்ததாக லல்லு பிரசாத் யாதவ் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.