பாட்னா, ஜன. 7–
பீகாரில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ள சாதிவாரி கணக்கெடுப்பு பணியில், முதல்கட்ட சாதிவாரி கணக்கெடுப்பு இன்று முதல் நடத்தப்படுகிறது.
பீகாரில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த அனுமதி கோரும் வகையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஜூன் முதல் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளும் ஒப்புதல் அளித்தன. அமைச்சரவையில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலமைச்சர் நிதீஷ் குமார் அறிவித்திருந்தார். அந்த வகையில் இன்று முதல் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
2 கட்டமாக கணக்கெடுப்பு
இதற்காக அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்படடுள்ளது. அதன்படி முதல்கட்ட சாதிவாரி கணக்கெடுப்பு இன்று தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடத்தப்படும். இரண்டாம் கட்ட சாதிவாரி கணக்கெடுப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது.
கணக்கெடுக்கப்படும் தரவுகள் எண்ம (டிஜிட்டல்) முறையில் சேமிக்கப்படும். ஸ்மார்ட் போன் செயலி மூலம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, பஞ்சாயத்து முதல் மாவட்ட அளவில் தரவுகள் வகைப்படுத்தப்படும். சாதி வாரி கணக்கெடுப்பு மூலம் ஓபிசி பிரிவினரை துல்லியமாக கணக்கெடுத்து அவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.