செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் நாளை விண்ணில் சீறிப்பாய்கிறது

Makkal Kural Official

சென்னை, ஜன. 11:

பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது.

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்மை செயற்கைக்கோளான இதனுடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்’ என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன், இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோள்களும் இதனுடன் விண்ணுக்கு ஏவப்படுகிறது.

இந்த செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை 10.17 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. புத்தாண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ராக்கெட்டாகும். இந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் இன்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது.

ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. ஏவுதலுக்கு முந்தைய சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த ஆண்டில் முதல் முறையாக 12-ந்தேதி (நாளை) இஸ்ரோ ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளோம். இதன் மூலம் இதுவரை பல்வேறு வெளிநாடுகளின் 442 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய பெருமை இஸ்ரோவுக்கு கிடைத்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருப்பதியில் சாமி தரிசனம்

இதற்கிடையே இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விஞ்ஞானிகள் நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் வரவேற்று தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர். கோவிலில் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் மாதிரியை மூலவர் ஏழுமலையான் காலடியில் வைத்து அர்ச்சகர்கள் சிறப்புப்பூைஜகள் செய்தனர்.

சாமி தரிசனம் செய்து முடிந்ததும் கோவிலில் இருந்து வெளியே வந்த இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-61 தோல்வியடைந்தது. 12-ந்தேதி (நாளை) காலை 10 மணி 17 நிமிடங்களுக்கு பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவவேண்டும் என்பதற்காக ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தோம். இ.ஓ.எஸ். என்-1 செயற்கைகோள் விவசாயம், பேரிடர் மேலாண்மை, புவி கண்காணிப்பு பணிகளை துல்லியமாக மேற்கொள்ளும்.

இந்த ஆண்டு இறுதியில் குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட்களை விண்ணில் செலுத்த தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். 2027-ம் ஆண்டு மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கு முன் 3 முறை ஆளில்லாத சோதனை ராக்கெட்களை அனுப்ப திட்டமிட்டு இருக்கிறோம். இந்த ஆண்டில் முதல் முறையாக 12-ந்தேதி(நாளை) இஸ்ரோ ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளோம். இதன் மூலம் இதுவரை பல்வேறு வெளிநாடுகளின் 442 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய பெருமை இஸ்ரோவுக்கு கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *