செய்திகள்

பி.எப்.7 வகை கொரோனா குறித்து இந்தியா அச்சப்படத் தேவையில்லை

மூத்த விஞ்ஞானி ராகேஷ் மிஷ்ரா தகவல்

புதுடெல்லி, டிச.23–

பி.எப்.7 வகை கொரோனா சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அது குறித்து இந்தியா அச்சப்படத் தேவையில்லை என்று மூத்த விஞ்ஞானி ராகேஷ் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலையில் அந்த நாட்டில் தினமும் 10 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது. நாள்தோறும் 5 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். அடுத்த ஒரு மாதத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சமாக உயரும் என்றும், மார்ச் மாதத்தில் இது 42 லட்சமாக அதிகரிக்கும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பி.எப்.7 வைரஸ்

சீனாவில் இருந்து குஜராத்தின் பாவ் நகருக்குத் திரும்பிய தொழிலதிபர் ஒருவருக்கு ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். அவரது குடும்பத்தினர், அவேராடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு பி.எப்.7 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள டாடா மரபியல் மற்றும் சமூகம் நிறுவனத்தின் இயக்குனரும் மூத்த விஞ்ஞானியமான ராகேஷ் மிஷ்ரா கூறுகையில், “சீனாவில் வேகமாக பரவிவரும் பி.எப்.7 வைரஸ், ஒமிக்ரானின் துணை வகையைச் சேர்ந்தது. இந்த வைரஸ் குறித்து இந்தியா அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை. எனினும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். தேவையின்றி கூட்டம் கூடக்கூடாது. பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இந்தியா பல்வேறு வகையான கொரோனா தொற்றுக்களைப் பார்த்து கடந்து வந்திருக்கிறது. ஆனால், சீனா அப்படி அல்ல. அதனால்தான் அந்த நாட்டில் தொற்று அதிகமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *