சிறுகதை

பிழைக்கத்தெரிந்தவர்கள் | ராஜா செல்லமுத்து

வாயைத்திறந்தால் அத்தனையும் வடிகட்டிய பொய்கள். செய்யும் செயல் அத்தனையும் ஏமாற்று வேலை.

தினமும் ஜிலு ஜிலு உடையில் வரும் மகேஷுக்கு எவனிடம் எப்படிப்பேசினால் பணம் கறக்கலாம் யாருடனும் அட்டை போல எப்படி ஒட்டிக்கொள்ளலாம் என்ற வித்தை அவனுக்கு அத்துபடி.

அவன் சிரிப்பே முகம் முழுவதும் பொய் பூசிக்கொண்டிருக்கும்.

வழக்கம் போல வளைந்து குழைந்து நின்றவனிடம்.

‘‘என்ன மகேஷ்.. ஆபீஸ் எப்பிடி போயிட்டு இருக்கு..’’ கொஞ்சம் புன்னகையோடு கேட்டார் மேலாளர்.

‘‘சார் உங்க புண்ணியத்தில எல்லாம் ஓகோன்னு இருக்கு சார்.. நீங்க மனுசன் இல்ல சார் மனுச வடிவில இருக்கிற சாமி’’ என்று உச்சந்தலையில் எஸ்கிமோவை வைத்து எச்சில் வழிய வழியப் பேசினான் மகேஷ்.

ம்..ம்.. இன்னைக்கு என்ன வேலையிருக்கு…?

‘‘ஆபீஸ் வேலை ஓ.. கோ..ன்று போயிட்டு இருக்கு’’

‘‘அது மெஷின் மாதிரி சார். பட்டன் தட்டுனா எல்லாம் பட்டு பட்டுன்னு ஓடிட்டே இருக்கும். நீங்களோ நானோ இல்லன்னாலும் அது அது பாட்டுக்கு ஓடிட்டே இருக்கும். இழை பேஞ்சு வழியுற வெள்ளம் மாதிரி வேலை விர்ன்னு நடந்திட்டே இருக்கும் கொடுக்கிற ஆர்டருக்கும் நாம குடுக்கிற சரக்குக்கும் ரொம்ப சுத்தமா பணம் வருது சரக்கு போகுது. எல்லாமே இங்க சுத்தமா நடந்திட்டு இருக்கு சார்… நீங்க பேசாம கால்மேல கால் போட்டுட்டு அழகா இளையராஜா பாட்டக் கேட்டுட்டு இருங்க. எல்லாம் நல்லபடியா முடியுமென்று மகேஷ் மேலாளருக்கு மேலும் எஸ்கிமோவை அதிகப்படுத்தினான்.

‘‘ம்..ம்.. அதுதான் நான் எப்பவும் யாரையும் நம்புறதில்ல மகேஷ் ஒன்ன மாதிரி ஒரு ஆள் இருந்தா போதும் எந்த வேலையா இருந்தாலும் விட்டுட்டு போயிட்டே இருக்கலாம். அவ்வளவும் சுத்தமா முடிஞ்சிரும்’’ என்று மகேஷ் பாராட்டுப் பத்திரத்தைப் பத்திரமாகத் தந்தார் மேலாளர்.

கேரளாவுக்கு போக வேண்டிய சரக்கு போயிருச்சு ஆந்திரா கர்நாடகான்னு அவ்வளவும் அழகா போய்ச் சேந்திருச்சு

ஓ.. சோப்பு கிரீமெல்லாம் இப்ப எப்பிடி இருக்கு ? வாடிக்கையாளர்களோட ரெஸ்பான்ஸ் எப்பிடி? இதுபத்தி ஏதாவது தெரியுமா?

‘‘எல்லாமே நல்லா இருக்கு சார் ..வாடிக்கையாளர்கிட்ட இருந்து எக்கசக்குமா மரியாதை வருது நம்ம பொருள பத்தி அப்பிடிப்பேசுறாங்க மார்க்கெட்டுல எவ்வளவு சரக்குகள் இருந்தாலும் நம்ம சரக்குக்கு அது ஈடாகாதுங்க அத்தனையும் அக்மார்க் சர்ட்டிபிக்கேட் உலகத்தரம் எதுன்னு கேட்டா உடனே அது நம்ம பொருள் தானுன்னு உத்ரவாதம் கொடுக்கலாம்’’ என மேலாளரின் மூளையில் மிக மோசமான சிந்தனைகளை ஏற்றிக் கொண்டிருந்தான் மகேஷ்.

‘‘ஏப்பா… சுகுமாரு இந்த மகேஷ் ஏன் இப்பிடி பொய் சொல்லிட்டு அலையுறான் மார்க்கெட்டுல நம்ம பொருளோட நிலைமை என்னன்னு மேனேஜருக்கு தெரியுமா.. தெரியாதா..? இவன் அள்ளி விடுறத அப்பிடியே நம்பிட்டு இருக்காரு இந்தாளுக்கு விவரம் இருக்கா இல்லையா? அத்தனைக்கும் பூம்பூ மாடு மாதிரி தலையை ஆட்டிட்டே இருக்காரு .

‘‘ஆமாங்க..

‘‘சுகுமாரு இதெல்லாம் தெரியாம நீயும் நானும் இந்த நிலைமையில் வாழ்ந்திட்டு இருக்கோம் மகேஷ் எப்பிடி இருக்கான்னு பாத்தியா..?

‘‘ஆமாமா.. காரு, பங்களா, வீடு வாசல் சொத்து சுகம்னு வெகுஜோரா .. வாழ்ந்திட்டு இருக்கான்’’

‘‘ம்.. நாம அவன மாதிரி எதுவும் பேச தெரியாமத்தான் பத்து ருவாய்க்கு கஷ்டப்பட்டு இருக்கோம். இங்க அறிவவிட பூச்சாண்டி புடிக்கிறவனுக்கு தான் காலம் நாமளும் அப்படியே பேசிட்டு போனம்னா நல்ல வசதியா வாழலாம்’’ என்று சுகுமாருக்குச் சொல்லிக் கொண்டிருந்தார் சுப்பையா.

‘‘நாமெல்லாம் அப்பிடி இருக்க முடியாதுங்க நமக்கு முதுகெலும்பு இருக்கு’’

‘‘டேய் … டேய் … முதுகெலும்பு முக்கியமா வாழ்க்கையில ஜெயிக்கிறது முக்கியமா..? குடுத்துவிடுற சரக்கெல்லாம் எதுவும் சரியில்லன்னு அம்புட்டும் அம்புட்டும் அப்பிடியே திரும்பி வருது. ஆனா வாய் கூசாம எப்பிடி பொய் சொல்லிட்டு அலையுறான்னு பாத்தியா..? அவந்தாண்டா நல்லா இருக்கான். நீயும் நானும் உண்மை பேசியே உருப்படாம போயிர்றோம். சிக்கன் கொழம்புல கத்திரிக்கா போட்டா எப்பிடி இருக்கும்னு மேனேஜர் கேட்டா ஓ சூப்பரா இருக்கும் சார் போட்டுப்பாருங்க. அமிர்தமா இருக்கும்னு வாய் கூசாமப்பொய் சொல்லணும். அப்பிடின்னா மட்டும் தான் நீயும் நானும் இந்த ஒலகத்தில வாழ பிட் பெர்சன் இல்லன்னா காலம் பூராம் கஷ்டத்திலயே வாழ்ந்து கஷ்டத்திலேயே சாக வேண்டியது தான் ’’ என்ற சுப்பையா எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அது சுகுமாரின் செவிகளில் போய்ச் சேரவே இல்லை.

‘‘இப்பிடியே இந்த வாழ்க்கை போனாலும் சரி மகேஷ் மாதிரி எல்லாம் என்னால பொய் சொல்ல முடியாது. அது நம்ம ரத்தத்திலயும் இல்ல..’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது

‘‘சார் இன்னைக்கு நாம அனுப்பி வச்ச சரக்கப் பத்தி ஓகோன்னு பேசுறாங்க சார். குறிப்பா நம் சோப்பு பத்தி அப்படிப்பேச்சு’’ என்று மகேஷ் சொல்ல

‘‘அப்பிடியா சூப்பர்.. சூப்பர்.. என்று’’ உச்சிக்குளிர்ந்த மேலாளர் இதெல்லாம் உண்மையென்றே நம்பி சிரித்துக் கொண்டிருந்தார் ஏமாற்று வேலையில் ஏற்றம் பெறுவோர் சதி அறியாமலேயே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *