செய்திகள்

பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும்: எடப்பாடி வேண்டுகோள்

கொரோனா தொற்றுநோய் சிகிச்சைக்கு

பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும்:

எடப்பாடி வேண்டுகோள்

திருநெல்வேலி, ஆக.8–

கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

6.8.2020 வரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 21,499 நபர்கள், தென்காசி மாவட்டம் முழுவதும் 44,695 நபர்கள்.

இந்த இரண்டு மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கக்கூடிய நிலையில் படுக்கை வசதிகளுடன் மருத்துவமனைகள், மருத்துவ உபகரணங்கள் என அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் தேவையான அளவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டு அதன் மூலம் பிளாஸ்மா தானம் பெறப்பட்டு, தீவிர தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட 1 நோயாளிக்கு இந்த மாவட்டத்தில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளாஸ்மா தானம் செய்வதற்கு பலர் முன்வர வேண்டுமென்று அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில், 7 தளங்கள், 330 படுக்கை வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த மருத்துவக் கல்லூரியில் தற்போது 150 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். பயின்று வருவதை 250 மாணவர்கள் பயிலக்கூடிய அளவிற்கு 100 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,803 சுயஉதவி குழுக்கள் உள்ளன. அக்குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூபாய் 79.95 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இலவச வீட்டுமனைப் பட்டா 7,008 நபர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. திசையன்விளையில் புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.

திசையன்விளையிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் மணக்குடியிலுள்ள கல்லூரிக்கும் புதிய கட்டிட வசதி செய்து கொடுத்துள்ளோம். திருநெல்வேலி மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூபாய் 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 7 பணிகள் ரூபாய் 46.16 கோடி மதிப்பீட்டில் முடிவுற்றுள்ளது. 30 திட்டப் பணிகள் ரூபாய் 574.32 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. 18 பணிகளுக்கு ரூபாய் 176.28 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. 2 பணிகள் ரூபாய் 102.78 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

திருநெல்வேலி மாநகராட்சியில், 2016–-17–ம் ஆண்டு அம்ரூத் திட்டத்தின் மூலம் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முதற்கட்டமாக ரூபாய் 289 கோடி மதிப்பீட்டில் பணியாணை வழங்கி தற்பொழுது 40 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இரண்டாம் கட்டமாக ரூபாய் 440.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 15 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த இரண்டு திட்டங்களும் பயன்பாட்டிற்கு வரும்போது 9,818 கட்டடங்களுக்கு பாதாளச் சாக்கடை இணைப்புகள் வழங்கப்படும்.

ரூ.230 கோடியில் குடிநீர் திட்டம்

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோக அபிவிருத்தி திட்டப் பணிகளை ரூபாய் 230 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 80 சதவிகிதப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. எஞ்சிய 15 சதவிகிதப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெற்று, மக்களுக்குத் தேவையான குடிநீர் வழங்கப்படும். இதன்மூலம் 50 மில்லியன் லிட்டர் தண்ணீர் கூடுதலாக திருநெல்வேலி மாநகரத்திற்கு வழங்கப்படும்.

ரெட்டியார்பட்டி மற்றும் 63 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற ரூபாய் 28.71 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெற்று மக்களுக்கு பயன்பாட்டிற்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் ஒன்றியத்தின் ஒரு பகுதி மற்றும் பாளையம்கோட்டை ஒன்றியப் பகுதியை சார்ந்த 34 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ரூபாய் 6.35 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலன் கருதி, ராதாபுரம் கால்வாய் திட்டம் என்ற புதிய திட்டத்திற்குத் தேவையான நிதி ஒதுக்குவதற்கு அம்மாவின் அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம், பழையாற்றில் வீணாகக் கடலில் கலக்கும் நீரை தாமரைக்குளத்திலிருந்து நீரேற்று மூலம் ராதாபுரம் கால்வாயில் இணைத்து விவசாயிகளுக்குத் தேவையான நீர் வழங்க அரசால் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரூ. 160 கோடியில் இந்தப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *