செய்திகள்

பிளாட்பார டிக்கெட் விற்பனை வருவாய்: 94 சதவீதம் வீழ்ச்சி

போபால், ஜூன் 15–

ரெயில்வே பிளாட்பார டிக்கெட் விற்பனை வருவாய் 2020-21 நிதி ஆண்டில் 94 சதவிகிதம் சரிந்துள்ளதாக ரயில்வே துறை அளித்த பதிலில் தெரியவந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பிரதமர் மோடி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அறிவித்தார். அதைத்தொடர்ந்து பல ரயில்வே மண்டலங்களில் பிளாட்பார டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. பயண டிக்கெட் வைத்திருப்பவர் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஓராண்டுக் காலம் இது அமலில் இருந்தது. பின்னர் பிளாட்பார டிக்கெட் கட்டணத்தை ரூ.10-ல் இருந்து ரூ.30 ஆகவும், பின்னர் சில மண்டலங்களில் ரூ.50 ஆகவும்கூட உயர்த்தவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கட்டண உயர்வு தற்காலிகமானது, கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது எனக் கூறப்பட்டது.

94 சதவீதம் வீழ்ச்சி

இந்நிலையில் பிளாட்பார டிக்கெட் விற்பனையின் மூலமான ரயில்வேயின் வருமானம் 2020-21 ஆண்டில் 94 சதவிகிதம் சரிந்துள்ளது. இந்த தகவல், மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர், தகவல் அறியும் சட்டத்தின்படி எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே அளித்த பதிலில் தெரியவந்துள்ளது.

2020-21 நிதி ஆண்டில் 2021 பிப்ரவரி மாதம் வரையில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனையால் கிடைத்த வருமானம் ரூ.10 கோடி மட்டுமே. 2018-19 நிதி ஆண்டில் பிளாட்பார டிக்கெட் விற்பனை மூலம் ஈட்டிய வருமானம் ரூ.130.20 கோடி. 2019-20 நிதி ஆண்டில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனையில் கிடைத்த வருவாய் 160.87 கோடி ஆகும்.

இது அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் ரயில்வே ஈட்டிய அதிகபட்ச வருமானம் ஆகும். இதனுடன் ஒப்பிடுகையில் 2020-21 நிதி ஆண்டில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனையில் 94 சதவிகிதம் ரயில்வேக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *