செய்திகள்

‘பிளாக் மெயில்’ செய்த சிறுவனைக் கொன்று 20 வயது வாலிபர் தற்கொலை

குவாலியர், செப்.23–

தன்னை ‘‘பிளாக்மெயில்’’ செய்த சிறுவனை கொன்று விட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:–

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் நேற்று வாய் மற்றும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 15 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஹசிரா பகுதியில் 20 வயது இளைஞர் ஒருவர் தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கு கண்டெடுக்கப்பட்ட தற்கொலைக் கடிதத்தில் சிறுவன் தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகவும், தன்னை பிளாக்மெயில் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் நகரில் உள்ள பழைய ஜேசி மில் வளாகத்தில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அங்கு ஒரு மேக்கப் உபகரணமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மேக்கப் கலைஞரான அந்த இளைஞர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு சிறுவனைக் கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் அமித் சாங்கி கூறும்போது, ‘இளைஞரின் தற்கொலைக் கடிதத்தில் சிறுவன் தன்னுடன் உடல் உறவை ஏற்படுத்தி, தன்னை பிளாக்மெயில் செய்ததால் இவ்வாறு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் மரணத்திற்கான காரணம் தெரிய வரும்’ என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.