– : மா .செழியன் :–
பிளாக்செயின் தொழில்நுட்பம் என்பது, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட மையப்படுத்தப்படாத, பரவலாக்கப்பட்ட தகவல், தரவு தொடர் பதிவேடு தொழில்நுட்பம் ஆகும். இதன்படி எந்த தனியார் முதலாளியிடமும் பன்னாட்டு நிறுவனத்திடமும் தனியாக தகவல், தரவுகள் கொண்ட டிஜிட்டல் பதிவேடு எனும் சர்வர் இருக்காது. அது உலகம் முழுக்க இருக்கும். யார் யாரிடம் எந்தெந்த நாட்டில் தொடர் பிளாக்குகள் கொண்ட சர்வர்கள் இருக்கிறது என்பதே தெரியாது.
அந்த தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்படும் தகவல்கள், தரவுகளை சரிபார்க்க ஆட்கள் கிடையாது. அவற்றில் பதிவாகும் தகவல்களையும் தரவுகளையும் சரிபார்க்க செயற்கை நுண்ணறிவு (AI-Artificial Intelligence), எந்திர கற்றல் (ML-Machine Learning), விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் (DLT-Distributed Ledger Technology) மற்றும் இணைய பயன்பாட்டு கருவிகள் (IoT-Internet of Things) ஆகியவை இந்த பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் முதன்மையான பங்களிப்பு செய்கின்றன. இந்த தொழில்நுட்பத்தில் மனிதர்களின் பங்களிப்பு ஏதும் இல்லை.
கூட்டு செயலாக்கம்
விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் குறித்து எளிமையாக கூற வேண்டுமானால், ஒரு வகுப்பில், ஆசிரியர் ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண்களை ஒரு லெட்ஜர் புத்தகத்தில் பதிவு செய்கிறார். இந்த லெட்ஜர் புத்தகம் வகுப்பறையில் மட்டுமே கிடைக்கிறது.டிஎல்டி எனும் தொழில்நுட்பத்தில், லெட்ஜர் புத்தகம் பல கணினிகளில் பகிரப்படுகிறது. ஒவ்வொரு கணினியும் லெட்ஜர் புத்தகத்தின் முழுமையான நகலை வைத்திருக்கிறது என்பது இதன் சிறப்பு அம்சம் ஆகும். இதனை யாரும் மாற்றவோ, திருடவோ முடியாது என்பது கூடுதல் சிறப்பு.
செயற்கை நுண்ணறிவு மூலமான இயற்கை மொழி செயலாக்கம் மற்றும் இயந்திர கற்றல் போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பிளாக்செயினில் பகிரப்படும் ஒவ்வொரு தரவையும் புரிந்துகொண்டு பகிரவும் பதிலளிக்கவும் செய்யும். இது ஒரு கூட்டு செயலாக்க தொழில்நுட்பம் என்றே சொல்ல வேண்டும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு நோக்கத்தை நிறைவேற்ற ஒரு பிளாக்செயின், கரன்சி போன்றவற்றை ஒரு நிறுவனம் உருவாக்கினாலும் அதன் பின்னர் தனி மனிதர்களுக்கோ, தனி ஒரு நிறுவனத்துக்கோ எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை என்பதுதான் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் விசித்திரமான உண்மை என்பதே குறிப்பிடத்தக்கது.
இதற்காக, ஏராளமான பிளாக்செயின்கள் உலகம் முழுவதும் உருவாக்கப்படுகிறது. பிளாக்செயின் தொழில்நுட்பத்தை “தொடர் தானியங்கி (டிஜிட்டல்) பதிவேட்டு இணையம்” என்று அழைக்கலாம். ஆனால், பிளாக்செயின் தொழில்நுட்பத்தை, தமிழ்நாடு அரசு எளிய மொழியில், “நம்பிக்கை இணையம்” என்ற பெயரில் அழைக்கிறது. மேலும் நம்பிக்கை இணையத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.
(தொடரும்…)