மா.செழியன்
“ராமன் எத்தனை ராமனடி?”…என்று ஒரு திரைப்பட பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆம், சீதா ராமன், கல்யாண ராமன், பரசு ராமன், ராஜா ராமன், சுந்தர ராமன், கோசல ராமன், கோதண்ட ராமன், அனந்த ராமன், சிவ ராமன், ஜெய ராமன், தசரத ராமன் என நீண்டுகொண்டே செல்லும் அல்லவா? அதுபோல், பிளாக் செயின்கள் நோக்கம் எண்ணில்லாதவை. எத்தனை பிளாக் செயின்கள் இருக்கிறது என்று கணக்கிட வேண்டுமானால், எத்தனை கிரிப்டோ கரன்சிகள் இருக்கிறது என்பதை கணக்கிட்டால் ஓரளவு அறிந்து கொள்ளலாம்.
பிட் காயின், எத்தீரியம் காயின், டேஷ் காயின், மோனோரோ காயின், லைட் காயின், பெல்டெக்ஸ் காயின், ரிப்பிள் காயின், டிரான் காயின் என உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான கிரிப்டோ கரன்சிகள் நடைமுறையில் உள்ளது. “Coin market cap” என்ற இணையதளம் மட்டுமே 20 ஆயிரத்துக்கு மேலான கிரிப்டோ கரன்சிகளை பட்டியலிட்டுள்ளது. இது இல்லாது ஆயிரக்கணக்கான காயின்கள் வேறுவேறு இணைய தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. பட்டியலிடப்படாத கிரிப்டோ காயின்கள் ஏராளமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள கிரிப்டோ கரன்சிகள் ஆகும்.
எதற்கெல்லாம் கிரிப்டோ?
எடுத்துக்காட்டாக பணத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட பிட் காயின், லைட் காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளுக்கு தனித் தனி பிளாக்செயின். அதேபோல் ஸ்மார்ட் ஒப்பந்தம், விளையாட்டு, பணப் பரிவர்த்தனை, டிஜிட்டல் சொத்து, தேர்தல் வாக்குப்பதிவு, தரவு பாதுகாப்பு என ஏராளமான நோக்கங்களுக்காக பிளாக்செயின்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் இயங்குவதற்காக, கிரிப்டோ கரன்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெவ்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டு கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை. இதுதான் வெப்–3.0 வின் கற்பனைக்கு எட்டாத வளர்ச்சி என்று சொல்ல வேண்டும்.
ஏனெனில், பிளாக்செயின் என்பதை “தொடர் தானியங்கி பதிவேடுகள் ” என்று சென்ற பகுதியில் சொன்னோம் அல்லவா? அந்த “தொடர் தானியங்கிப் பதிவேடு” (CHAIN SERVER) யார் ஒருவருக்கும் தனியாக சொந்தம் அல்ல என்று முன்பே சொன்னோம் அல்லவா?. அப்படியானால் அந்த பிளாக்குகளை உருவாக்குபவர்களுக்கு, மற்றும் உருவாக்கி பாதுகாப்பவர்களுக்கு என்ன பயன்? அதற்காக உருவாக்கப்பட்டதுதான் “கிரிப்டோ கரன்சி”. (தொடரும்…)