செய்திகள்

பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி: 202 மையங்களில் இன்று துவங்கியது

சென்னையை தவிர பிற பகுதிகளில்

பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி:

202 மையங்களில் இன்று துவங்கியது

* ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து பணியாற்றினார்கள்

* மையங்களில் மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆய்வு

 

சென்னை, மே.27-

சென்னையை தவிர பிற பகுதிகளில் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி 202 மையங்களில் இன்று தொடங்கியது. ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து பணியாற்றினார்கள். விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பிளஸ்–2 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ந்தேதி தொடங்கி, 24ந்தேதி வரை நடைபெற்று முடிந்தது. சுமார் 48 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் பணி கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி ஜூன் 9–ந்தேதி வரை நடைபெறும் என்றும், தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட தேர்வு முடிவு வெளியிடுவதற்கான பணிகள் ஜூன் 10 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

அதன்படி சென்னையை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று காலை துவங்கியது.

ஒரு ஆசிரியருக்கு 24 விடைத்தாள்

ஏற்கனவே 67 விடைத்தாள் திருத்தும் மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டி கூடுதலாக தற்போது 202 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்வு அறையில் 8 பேர் மட்டும் பணியில் ஈடுபட்டனர். ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 24 விடைத்தாள்கள் மட்டுமே திருத்துவார்கள்.

தலைமை மதிப்பீட்டாளர்கள் 10 ஆயிரத்து 746 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முககவசம் அணிந்தப்படி, இடைவெளியை பின்பற்றி நோய் தொற்று பரவாத வகையில் பாதுகாப்புடன் பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் முக கவசங்கள் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவ்வப்போது சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து கொண்டனர். ஆசிரியர்கள் பணிக்கு சென்றுவர ஏதுவாக போக்குவரத்து வசதி செய்யப்பட்டிருந்தது

சென்னையில் இல்லை

சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், விடைத்தாள் திருத்தும் பணிகளில் சென்னைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது, மேலும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பிற மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் திருத்துதல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உட்பட விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 4 விடைத்தாள் திருத்தும் மையத்திற்கும் கலெக்டர் அண்ணாதுரை நேரில் சென்று அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் 6 மையங்களில் இன்று துவங்கியது.

இந்த பணியில் விழுப்புரம் மையத்தில் 561 ஆசிரியர்களும், திண்டிவனம் மையத்தி்ல் 412 ஆசிரியர்களும், செஞ்சி மையத்தில் 301 பேரும், அரகண்டநல்லூரில் 254 பேரும், கள்ளக்குறிச்சியில் 635 பேரும், உளுந்தூர்பேட்டையில் 152 பேரும் என ஆக மொத்தம் 2,315 ஆசிரியர்கள் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.

ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார். ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *