செய்திகள்

பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி

Makkal Kural Official

* திருப்பூர் மாவட்டம் முதலிடம் * அனைத்து மாவட்டங்களும் 90% தேர்ச்சி

* தமிழில் 35 பேரும், கணினி அறிவியலில் 6996 பேரும் ‘சதம்’

* 397 அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி

சென்னை, மே 6–

பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே (96.44%) அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொதுத்தேர்வு முடிவை இன்று காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்.

வழக்கமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்தான் தேர்வு முடிவுகளை வெளியிடுவார். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்வுத்துறை அதிகாரிகள் இந்த ஆண்டு தேர்வு முடிவை வெளியிட்டனர்.

www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர்.

தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுதவிர, தேர்வு முடிவுகள் மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டது.

3,302 தேர்வு மையங்கள்

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த மார்ச் 1ல் துவங்கிய பொதுத்தேர்வு மார்ச் 22ல் முடிந்தது. தமிழகம் முழுவதும் 3,302 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 ஆகும். இதில் 4 லட்சத்து 8 ஆயிரத்து 440 மாணவிகள், 3 லட்சத்து 52 ஆயிரத்து 165 மாணவர்கள் அடங்கும். ஒருவர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். 21,875 தனித்தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12,000 பேர் தேர்வு எழுதவில்லை.

பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தப் பணிகள், 83 மையங்களில், 30,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. விடைத்தாள் திருத்தப் பணிகள் கடந்த ஏப்ரல் 13–ந்தேதி நிறைவு பெற்றன. மதிப்பெண் ஆய்வு, பகுப்பாய்வு பணிகள் 30க்குள் முடிந்தன. இதையடுத்து இன்று தேர்வு முடிவுகள் வெளியானது.

தேர்ச்சி சதவீதம் அதிகம்

பிளஸ்–2 பொதுத்தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196, இது 94.56 சதவீத தேர்ச்சி ஆகும். இது கடந்த ஆண்டை காட்டிலும் 0.53 சதவீதம் அதிகம் ஆகும். இதில் மாணவிகள், 3 லட்சத்து 93 ஆயிரத்து 890, (96.44 சதவீதம்), மாணவர்கள் 3 லட்சத்து 25 ஆயிரத்து 305 பேர் (92.37 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.07 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்வு எழுதிய நிலையில், அவரும் தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 5603 ஆகும். இதில் 5161 (92.11%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 125 சிறை கைதிகளில் 115 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொதுத்தேர்வு எழுதிய மொத்தமுள்ள 7532 மேல்நிலைப்பள்ளிகளில், 100% தேர்ச்சிப் பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2,478 ஆகும். இதில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 397 ஆகும்.

தேர்ச்சி விகிதத்தில் அரசுப் பள்ளிகள் 91.02%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.49%, தனியார் சுயநிதி பள்ளிகள் 98.70%, இருபாலர் பள்ளிகள் – 94.07 %

பெண்கள் பள்ளிகள் – 96.39 % ஆண்கள் பள்ளிகள் – 88.98% இடம் பிடித்துள்ளன.

அறிவியல் பாடப் பிரிவுகளில் 96.35%, வணிகவியலில் – 92.46%, கலைப்பிரிவுகள் 85.67%, தொழிற்பாடப் பிரிவுகள் 85.85% தேர்ச்சி் பெற்றுள்னர்.

திருப்பூர் முதலிடம்

திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 97.45 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று, முதலிடத்தை பிடித்துள்ளனர்.

சிவகங்கை, ஈரோடு மாவட்டங்களில் 97.42 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று 2ம் இடத்தையும், அரியலூர் மாவட்டம் 97.25 சதவீத தேர்ச்சியுடன் 3ம் இடத்தையும் பிடித்துள்ளன. கோவை மாவட்டம் 96.97 சதவீதத்துடன் 4ம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு முதலிடம் பிடித்த விருதுநகர் மாவட்டம் இந்த முறை 96.64 சதவீதம் பெற்று 5வது இடத்தில் உள்ளது. சென்னை மாவட்டம் 94.48% தேர்ச்சி. குறைந்தபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 90.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழில் 35 பேர் சதம்

தமிழ் பாடத்தில் 35 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு 2 பேர் மட்டும் 100 மதிப்பெண் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில் 7 பேரும், இயற்பியல் பாடப்பிரிவில் 633 பேரும் 100 சதவிகித மதிப்பெண் எடுத்துள்ளனர். இதேபோல வேதியியல் – 471 பேர், உயிரியல் – 652 பேர், கணிதம் – 2587 பேர், தாவரவியல் – 90 பேர், விலங்கியல் – 382 பேர், கணினி அறிவியல் – 6996 பேர், வணிகவியல் – 6142 பேர், கணக்கு பதிவியல் – 1647 பேர், பொருளியியல் – 3299 பேர், கணினிப் பயன்பாடுகள் – 2251 பேர், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் – 210 பேரும் 100 சதவிகித மதிப்பெண் எடுத்துள்ளனர். பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 26,352 ஆகும். இது கடந்த ஆண்டு 32,501 ஆக இருந்தது.

கணினி அறிவியலில் உச்சம்

பிளஸ்–2 தேர்வு முடிவுகளில் பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 99.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இயற்பியல் பாடத்தில் 98.48 சதவீதம் பேரும், வேதியியல் பாடத்தில் 99.14 சதவீதம் பேரும், உயிரியல் – 99.35 சதவீதம் பேரும், கணிதம் – 98.57 சதவீதம் பேரும், தாவரவியல் – 98.86 சதவீதம் பேரும், விலங்கியல் – 99.04 சதவீதம் பேரும், வணிகவியல் – 97.77 சதவீதம் பேரும், கணக்குபதிவியல் பாடத்தில் 96.61 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *